/tamil-ie/media/media_files/uploads/2023/08/Sivaji-Ganesan.jpg)
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
க்ளாசிக் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக முக்கிய இடத்தை பெற்றிருந்தவர் சிவாஜி கணேசன். எந்த கேரக்டராக இருந்தாலும் தனது நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து சிறப்பாக நடிக்கும் சிவாஜிக்கு நடிகர் திலகம் என்ற அடைமொழியும் உண்டு. நடிப்பு மட்டுமல்லாமல் தனது உடல்மொழியிலும் மாற்றங்களை செய்து இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு முக்கிய பாடமாக இருக்கிறார். 
அதேபோல் படப்பிடிப்புக்கு நேரம் தவறாமல் வர வேண்டும் என்பதை தனது இறுதிகாலம் வரை கடைபிடித்த சிவாஜி கணேசன், தான் நடிக்கும் காலத்தில் நாளைக்கு என்ன காட்சி படமாக்க போகிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு, அந்த காட்சிக்கான வசனம் குறித்த பேப்பரை வாங்கிக்கொண்டு சென்றுவிடுவார். அடுத்த நாள் வரும்போது அந்த கேரக்டருக்கான மேக்கப்புடன் வரும் சிவாஜி வசனத்தை இரு முறை படிக்க சொல்லி கேட்டு ஒரே டேக்கில் நடித்து விடுவார். 
இவர் வசன பேப்பரை வாங்கிக்கொண்டு போய் வீட்டில் படித்துவிட்டு இங்கே வந்து பேசுகிறார் என்று சந்தேகம் எழுந்த இருவர் படப்பிடிப்பு தளத்தில் அவரை சோதனை செய்துள்ளனர். 1954-ம் ஆண்டு வெளியான படம் அந்த நாள். எஸ்.பாலச்சந்தர் இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிவர்கள் ஜாவர் சீதாராமன் மற்றும் முக்தா சீனிவாசன். 
இவர்கள் இருவரும் சிவாஜியின் வசனத்தை பார்த்து சந்தேகப்பட்டதை தொடர்ந்து அவரை சோதிக்க நினைத்துள்ளனர். அப்படி ஒருநாள் படப்பிடிப்பு முடிந்து சிவாஜி வீட்டுக்கு செல்லும்போது நாளை படப்பிடிப்புக்கான வசன பேப்பரை வாங்கிக்கொண்டு சென்றுள்ளார். மறுநாள் அவர் வந்தபோது நேற்று உங்களிடம் கொடுத்த வசன பேப்பருக்கான காட்சியை இப்போது எடுக்க முடியாது என்று கூறியுள்ளனர்.  
மேலும் அந்த காட்சியில் நடிப்பவர்கள் வரவில்லை என்பதால் வேறொரு காட்சியை எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளனர். அதற்கு ஓகே சொன்ன சிவாஜி வசனத்தை படிக்க சொல்லியுள்ளார். முக்தா சீனிவாசன் இருமுறை வசனத்தை படிக்க அதை கேட்ட சிவாஜி படப்பிடிப்பு தொடங்கியது. அச்சு பிரளாமல் முக்தா படித்த அத்தனை வசனத்தையும் ஒரே டேக்கில் பேசி முடித்துள்ளார். இதை கண்ட முக்தா மற்றும் ஜாவர் இருவரும் இவ்வளவு பெரிய மகா கலைஞனை சந்தேகப்பட்டுவிட்டோமே என்று வருத்தப்பட்டுள்ளனர். பத்திரிக்கையாளரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் இந்த தகவலை கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

 Follow Us