தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்று பெயர் பெற்ற சிவாஜி தனது நடிப்புத்திறமையின் மூலம் பல ஹிட் படங்களை கொடுத்துள்ள நிலையில், ஒரு படத்தின் டைட்டில் ஷூட்டிங்கிற்காக யானை ஒன்றை கேட்டுள்ளார்.
1971-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான படம் சுமதி என் சுந்தரி. சிவாஜி கணேசனுடன், ஜெயலலிதா, கே.ஏ.தங்கவேலு, நாகேஷ், தேங்காய் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். படத்தில் ஒரு பாடல்களை தவிர மற்ற அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருந்தார். சி.வி.ராஜேந்தர் இயக்கிய இந்த படத்தை, நாக சுப்பிரமணியம் தயாரித்திருந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது, ஒருநாள் இயக்குனர் சி.வி.ராஜேந்திரை அழைத்த சிவாஜி, இந்த படத்தின் டைட்டில் காட்சிகளை எப்படி படமாக்க முடிவு செய்துள்ளீர்கள் என்று கேட்க, இன்னும் அது பற்றி முடிவு செய்யவில்லை அண்ணே என்று பதில் கூறியுள்ளார். தனி காட்டுப்பாதையில் நான் வந்துக்கிட்டு இருக்கேன். அப்போது ஒரு யானை என்னை துரத்துகிறது. அந்த யானையை நான் குறி வைத்து சுட முயற்சி செய்கிறேன்.
நான் சுடுவதற்குள் அந்த யானை தப்பி ஓடிவிடுகிறது இப்படி டைட்டில் காட்சி வைத்தால் எப்படி இருக்கும் என்று சிவாஜி கேட்டுள்ளார். இதை கேட்ட இயக்குனர் சி.வி.ராஜேந்தர், யோசிக்கலாம் அண்ணே என்று கூறியுள்ளார். உடனே அருகில் இருந்த நாகசுப்பிரமணியத்திடம், வேட்டைக்காரன் புதூர் முத்துமாணிக்கம் கவுண்டரிடம் சொன்னால் நல்ல யானை வாங்கி கொடுப்பார் அவரிடம் வாங்கிவிடுங்கள் எனறு கூறியுள்ளார். இதை கேட்ட அவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து படத்தின் கதாசிரியர் சித்ராயலா கோபுவை அழைத்த அவர், என்னங்க படப்பிடிப்புக்கு யானை கேட்கிறார்? யானை வாங்குவது அவ்வளவு சுலமான விஷயமா? இந்த விஷயத்தை நீங்கள் தான் எப்படியாவது சிவாஜியிடம் சொல்லி முடித்து வைக்க வேண்டும் என்று சொல்ல, மறுநாள் சிவாஜியை சந்தித்த சித்ராலயா கோபு, அண்ணே உங்க பெரு கணேசன், யானையும் கணேசன் என்று கூப்பிடுவார்கள். நீங்கள் யானையை சுட்டால் நல்லாருக்காது என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட சிவாஜி, சிரித்தபடியே, எனக்கு மட்டும் என்ன யானையை படப்பிடிப்புக்கு கொண்டு வர வேண்டும் என்று ஆசையா? அப்படி யானை வைத்து படப்பிடிப்பு நடத்த முடியாது எனக்கு தெரியாதா? நேற்று நாக சுப்பிரமணியம் உற்சாகமாக இருந்தார். இவரை என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அதனால் தான் அப்படி சொன்னேன் என்று கூறியுள்ளார். இதை கேட்ட கோபு நிம்மதி பெருமூச்சி விட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“