தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்று அழைக்கப்படும் சிவாஜி கணேசனின் முதல் படமான பராசக்தி படத்தின் ஷூட்டிங்கை பார்த்த இயக்குனர் ஒருவர், அடுத்து சிவாஜி கணேசனை இயக்க 19 ஆண்டுகள் காந்திருந்துள்ளார்.
தமிழ் சினிமாவில், நடிகர் திலகம் என்றும், நடிப்பு பல்கலைகழகம் என்று அழைக்கப்படும் முக்கிய நடிகர் சிவாஜி கணேசன். தனது வாழ்நாள் இறுதிவரை சினிமாவில் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி பலரையும் புருவத்தை உயர்த்த வைத்த இவர், 1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய இந்த படத்திற்கு கலைஞர் கருணாநிதி வசனம் எழுதியிருந்தார்.
சுதர்சன் இசையமைத்த இந்த படத்திற்கு, உடுமலை நாராயணகவி, உள்ளிட்ட பலர் பாடல் எழுதியிருந்த நிலையில், கவியரசர் கண்ணதாசன் இந்த படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதேபோல் இந்த படத்தின் மூலம் தான் எஸ்.எஸ்.ராஜேந்திரன் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போது, இயக்குனராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒருவருக்கு இந்த படததின் ஷூட்டிங்கை பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்த இந்த படப்பிடிப்பை பார்க்க வந்த அவருக்கு, இயக்குனர், வசனகர்த்தா, நடிகர் சிவாஜி கணேசன் ஆகியோர் குறித்து பேசியுள்ளார். 1951-ம் ஆண்டு இந்த படத்தின் ஷூட்டிங்கை பார்த்த அவர், 1965-ம் ஆண்டு நீர்குமிழி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை இயக்கியிருந்தாலும், இவர் எம்.ஜி.ஆர் சிவாஜி ஆகியோரை வைத்து அதிக படங்கள் இயக்கவில்லை.
குறிப்பாக எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படத்தை கூட இயக்காத இவர், சிவாஜி நடிப்பில், 1970-ம் ஆண்டு வெளியான எதிரொலி என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பிறகு கமல்ஹாசன், தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோரின் சினிமா வாழ்க்கைக்கு வெற்றியை கொடுத்த இயக்குனராக மாறினார். இவர் தான் இயக்குனர் கே.பாலச்சந்தர். பராசக்தி படத்தின் ஷூட்டிங்கை 1951-ம் ஆண்டு பார்த்த இவர், 19 வருடங்கள் கழித்து 1970-ம் ஆண்டு சிவாஜி கணேசனை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“