சுதந்திர போராட்ட தியாகியாக நடித்த சிவக்குமாரின் படத்தை பார்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தான் நடித்த சுதந்திர போராட்ட வீரரின் கேரக்டருக்கு அங்கீகாரம் கிடைக்காத விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிப்பு பல்கலைகழகம் என்று போற்றப்படும் நடிகர் சிவாஜி கணேசன். 1952-ம் ஆண்டு சினிமாவில் நடிக்க தொடங்கிய அவர், பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்த நிலையில், புராணங்கள், மற்றும் சுதந்திரபோராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தன் வாழ்நாளின் இறுதிவரை நடிப்பில் உச்சம் தொட்டவர் தான் சிவாஜி கணேசன்.
அதே போல் இயக்கத்தில் முத்திரை பதித்தவர் தான் மணிவண்ணன். இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உதவி இயக்குனராக இவர், 1982-ம் ஆண்டு வெளியான கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து 100-வது நாள், 24 மணி நேரம் உள்ளிட்ட த்ரில்லர் படங்களை இயக்கி இயக்குனராக முத்திரை பதித்த மணிவண்ணன், அரசியல் காமெடி படங்களை இயக்குவதில் முன்னணி இயக்குனராக திகழ்ந்தார்.
இவரது இயக்கத்தில் சத்யராஜ் நடித்த அனைத்து படங்களுமே அரசியல்வாதிகளின் நிஜ முகத்தை பிரதிபலிப்பது போன்று இருக்கும் குறிப்பாக அமைதிப்படை திரைப்படம் இன்றுவரை அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கும் முக்கிய படமாக இருக்கிறது. இப்படி பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள மணிவண்ணன் வித்தியாசமான ஒரு முயற்சியாக இயக்கிய படம் தான் இனி ஒரு சுதந்திரம்.
1987-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சிவக்குமார் நாயகனாக சுதந்திர போராட்ட தியாகியாக நடித்திருந்தார். வித்தியாசமான பாணியில் அமைந்திருந்த இந்த திரைப்படத்தை சிவாஜி கணேசனுக்கு திரையிட்டு காண்பித்துள்ளனர். இந்த படத்தை பார்த்த சிவாஜி, இப்படித்தான் நானும் சுதந்திர போராட்ட தியாகியாக வெள்ளைக்காரணை எதிர்த்து 2 கப்பல் ஓட்டிய வ.உ.சி கேரக்டரில் மிகுந்த ஆர்வத்துடன் கப்பலோட்டிய தமிழன் படத்தில் நடித்தேன்.
வெள்ளைக்காரனை எதிர்த்து 2 கப்பல் ஓட்டிய வ.உ.சி கடைசிகாலத்தில் பெரம்பூர் பக்கத்தில் பெட்ரோல் வண்டியை தள்ளி பிழைத்துக்கொண்டிருந்தார். அப்படிப்பட்ட அற்புதமான கேரக்டரில் நடித்த எனக்கு தமிழக மக்கள் கொடுத்த பரிசு என்னுடைய நெற்றியில் பட்டையாக நாமத்தை போட்டுவிட்டார்கள். இப்போ நீ சுதந்திரபோராட்ட தியாகியாக நடித்திருக்கிறாய். மக்கள் நாமக்கட்டியை குழைத்துக்கொண்டு இருக்கிறார்கள் தயாரா இரு என்று சிவக்குமாரிடம் கூறியுள்ளார்.
சிவாஜியின் இந்த வார்த்தையை கேட்ட சிவக்குமார் அதிர்ச்சியில் நெருங்கிப்போன நிலையில், கப்பலோட்டிய தமிழன் படத்தில் நடித்ததற்கு தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை சிவாஜி கணேசன் இப்படி வெளிப்படுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“