1971-ம் ஆண்டு பி.மாதவன் இயக்கத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படம் தேனும் பாலும். சிவாஜி, பத்மினி, சரோஜா தேவி,ரங்கராவ் ஆகியோர் இணைந்து நடித்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, வாலி, கண்ணதாசன் இருவரும் பாடல்கள் எழுதியிருந்தனர். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.
படத்தில் சிவாஜிக்கு பத்மினி ஒரு மனைவியாகவும், 2-வது மனைவியாக சரோஜா தேவியும் நடித்திருப்பார்கள். முதல் மனைவியான பத்மினிக்கு சிவாஜியின் 2-வது மனைவி தனது தோழி சரோஜா தேவிதான் என்பது தெரியாது. ஒரு கட்டத்தில் இந்த உண்மை பத்மினிக்கு தெரியவர, சிவாஜியை பார்த்து அவர் உணர்ச்சிப்பூர்வமாக வசனம் பேச வேண்டும். இந்த காட்சிக்கு பேச வேண்டிய வசனத்தை, ஆரூர்தாஸ் சொல்ல, பத்மினி கேட்டுக்கொண்டு இருந்துள்ளார்.
என்னை விட ஒரு அழகி உலகத்தில் இல்லை என்று சொன்னீங்களே, அது பொய்தானா, உங்கள் மனதை கவர்ந்து என்னிடம் இருந்து உங்களை பிரிக்க நினைக்கும், அவளை நான் பார்க்க வேண்டும். நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. ஆனால் எனக்கே அவள் கெடுதல் செய்கிறாள். அவளை பார்த்து 4 வார்த்தை கேட்க வேண்டும் என்று ஆரூர்தாஸ், பத்மினிக்கு வசனத்தை சொல்லிக்கொடுக்கிறார். இதை கேட்ட சிவாஜிக்கு கண்கள் கலங்கியுள்ளது.
அடுத்த நிமிடம் கண் கலங்கிய பத்மினி, ஆரூர் தாஸின் கைகளை பிடித்துக்கொண்டு, நான் பாசமலர் படத்தை பார்த்துவிட்டு எமோஷ்னல் ஆகி, கேராளாவில் இருந்து சாவித்ரிக்கு போன் செய்து பாராட்டினேன். உன்னையும் சிவாஜியையும் தவிர வேறு யாராலும் இப்படி நடித்திருக்க முடியாது. உங்கள் நடிப்புக்கு வசனம் மிகவும் முக்கியமாக இருந்தது என்று சாவித்ரியிடம் சொன்னேன் என்று பத்மினி சிவாஜியிடம் கூறியுள்ளார்.
இதை கேட்ட சிவாஜி, உண்மைதான் அந்த படத்திற்கு ஆரூர் தாஸ்தான் வசனம் எழுதினார். இதுதான் இவர் எனக்கு எழுதிய முதல் படம். இப்போது 10-வது படம் எழுதிக்கொண்டு இருக்கிறான். இடையில் படம் இயக்க சென்றுவிட்டான். இல்லை என்றால் இன்னும் 10 படம் சேர்த்து எழுதியிருப்பான் என்று சிவாஜி கூறியுள்ளார். அதனை கேட்ட பத்மினி இந்த சீனில் உங்களுக்கு டைலாக் இல்லையா என்று கேட்க, நீங்கள் தான் இவரை பேச வேண்டும். அவருக்கு டைலாக் இல்லை. அவர் பேசினால் உங்கள் எமோஷன் பிரேக் ஆகிவிடும் என்று ஆரூர் தாஸ் கூறியுள்ளார்.
அதன்பிறகு ஆரூர் தாஸிடம் பேசிய பத்மினி உங்களுக்கு ரெண்டு மனைவி தானே என்று கேட்க, அதற்கு பதில் சொல்லும் முன்பே, எப்படி பப்பிமா கண்டுபிடிக்க என்று, சிவாஜி பத்மினியிடம் கேட்டுள்ளார். அனுபவம் இல்லனா இப்படி எழுத முடியாதே என்று பதமினி சொல்ல, ஏய் மண்டு, சின்ன வயசிலே அக்கா மகளை கல்யாணம் பண்ணிக்கிட்டான். நானும் அக்கா பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எதாவது தப்பு பண்ண பின்னிடுவாங்க.
நாங்கள் எதாவது தப்பு பண்ணா அவ்வளவு தான் சோறு போட மாட்டாங்க. விரட்டி அடிச்சிடுவாங்க. இதை கேட்டு அதிர்ந்த பத்மினி பின்ன எப்படி இப்படி எழுதுகிறார் என்று கேட்க, அவன் யோசிப்பான், அனைத்தையும் மிகைப்படுத்தி எழுதுவான் என்று ஆரூர் தாஸ் குறித்து பேசியுள்ளார் சிவாஜி கணேசன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“