கவியரசர் கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலுக்கு இசையமைத்த கே.வி.மகாதேவன் இந்த பாடல் பெரிய ஹிட்டானபோதும் கூட அந்த பாடலை மறந்துள்ளார். அது ஏன்? அந்த பாடல் என்ன என்பதை பார்ப்போமா?
1979-ம் ஆண்டு பி.மாதவன் இயக்கத்தில் வெளியான படம் ஏணிப்படிகள். சிவக்குமார், ஷோபா இணைந்து நடித்த இந்த படத்திற்கு கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்த நிலையில், கண்ணதாசன் அனைத்து பாடங்களையும் எழுதியிருப்பார். சினிமா தியேட்டரில் வேலை செய்யும் ஷோபா சினிமாவில் நாயகி ஆக வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக முயற்சியும் செய்கிறார்.
அதே தியேட்டரில் வேலை பார்க்கும், சிவக்குமார் ஷோபாவை எப்படியாவது நடிகையாக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார். இவர்களுக்கு இடையே வரும் பாடல் தான், ‘பூந்தேனில் கலந்து’ என்ற பாடல். கவியரசர் கண்ணதாசன் எழுதிய இந்த பாடலில், ஷோபா ஏன் நடிகையாக வேண்டும் என்று நினைக்கிறார்? அவருக்கும் சிவக்குமாருக்கும் என்ன உறவு? உள்ளிட்ட பரிமாணங்களை சொல்லும் வகையில், எழுதியிருப்பார்.
பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடியிருந்த நிலையில், பெண் குரலில் வரும் பாடலை பி.சுசீலா பாடியிருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், படமும் பேசக்கூடிய ஒரு படமாக இருந்தது. இந்த படம் வெளியாகி பாடல் பெரிய ஹிட்டாகிய சில மாதங்கள் கழித்து கே.வி.மகாதேவன், எஸ்.பி.பாலசுப்பிரமணியன் இருவரும் காரில் சென்றுகொண்டிருக்கிறது. அப்போது கே.வி.மகாதேவன் இந்த பாடலை கேட்டுள்ளார்.
பாடலை கேட்டு மெய்மறந்த கே.வி.மகாதேவன், பாலு, (எஸ்.பி.பி) பாட்டு ரொம்ப நல்லா பண்ணிருக்காங்கப்பா யாருப்பா பண்ணது என்று கேட்டுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியான எஸ்.பி.பி. ஐயா, இந்த பாடலை உருவாக்கியது நீங்கள்தான். நீங்கள் இசையமைத்து இந்த பாடலை நான் தான் பாடினேன் என்று கூறியுள்ளார். இதை கேட்ட கே.வி.மகாதேவன் ஓஹோ அப்படியா என்று சாதாரணமான சொல்லிவிட்டு அவரது வேலையை பார்த்துள்ளார்.
இதை பார்த்த எஸ்.பி.பி, உங்களுக்கு இந்த பாடலை உருவாக்கியது நினைவில் இல்லையா ஐயா என்று கேட்க, எப்போதுமே ஒரு பாடலுக்கு இசையமைத்து அது வெளியாகிவிட்டால் அதை மறந்துவிடுவேன்பா, அதை மறக்கறது தான் நமக்கு நல்லது. அதை நாம் தலையில் ஏற்றிக்கொண்டால் தலைக்கணம் அதிகமாகிவிடும் என்று கூறியுள்ளார். புகழ் எவ்வளவு வந்தாலும் அதை தலையில் தூக்கி வைத்துக்கொண்டால் நமக்கு தலைகணம் வந்துவிடும் என்பதை உணர்ந்துள்ளார்.
அதன்பிறகு தனது வாழ்நாளின் இறுதிவரை எஸ்.பி.பி எந்த புகழையும் தலையில் தூக்கி வைத்துக்கொள்ளாமல், இருந்துள்ளார். இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் திரையிசை திலகம் என்று அழைக்கப்படும் கே.வி.மகாதேவன் தான் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“