சினிமா பாடல்கள் மூலம் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்ட முக்கிய கவிஞர் கண்ணதாசன். சாதாரணமாக இல்லாமல் தன் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள் கஷ்டங்கள், மகிழ்ச்சி என அத்தனை உணர்ச்சிகளையும் பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய கண்ணதாசன், இயக்குனர் தயாரிப்பாளர், கதாசிரியர், உள்ளிட்ட பல திறமைகளை உள்ளடக்கி இருந்தார்.
அதேபோல் மனித வாழ்க்கையின் அத்தனை உணர்ச்சிகளையும் பாடலாக வெளிப்படுத்தியுள்ள கண்ணதாசனின் வரிகள் விரக்தியில் உள்ள அனைவருக்கும் ஆறுதலாகவும், மகிழ்ச்சியில் உள்ள பலருக்கும் மேலும் மகிழ்ச்சியை தரக்கூடியதாகவும் உள்ளது. க்ளாசிக் சினிமாவை எடுத்துக்கொண்டால் கண்ணதாசனின் பாடல்கள் தனி இடம் பிடித்திருக்கும் என்ற நிலை இன்றளவும் உள்ளது.
அதேபோல் கண்ணதாசன் குடிப்பழக்கத்திற்கு ஆளானவர் என்பது அனைவரு அறிந்த ஒன்று. இதை பல மேடைகளில் அவரே ஒப்புக்கொண்டுள்ளார். ஆனாலும் தனது பாடல்களில் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பல பாடல்களை எழுதியுள்ளார். அப்படி அவர் எழுதிய பாடல் தான் ‘’நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்’’ என்ற பாடல். சிவாஜி கணேசன் நடித்த நீதி படத்தில் இந்த பாடல் இம்பெற்றுள்ளது.
இந்த பாடலுக்கான டியூனை அமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன், அதற்கு ‘’இன்று முதல் குடிக்க மாட்டேன் சந்தியமடி தங்கம்’’ என்று வரிகளை அமைத்திருந்தார். இந்த வரிகளை கேட்ட கண்ணதாசன் அருமையாக இருக்கிறது என்று கூறி 10 ரூபாய் பரிசு கொடுத்த நிலையில், எந்த குடிகாரனும் இன்று முதல் குடிக்க மாட்டேன் என்று சொல்ல மாட்டான், அதனால் அதை நாளை முதல் என்று மாற்றிக்கொள் என கூறி உனக்கு பரிசு இல்லை என்று கூறியுள்ளார்.
இந்த பாடலில் கடவுளே என்னிட்டம் கடன்காரன் என்று கண்ணதாசன் வரிகள் அமைத்து சிறப்பாக எழுதியிருப்பார். இந்த பாடல் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், இந்த பாடலை எழுத காரணமாக இருந்தவர் கண்ணதாசனின் தீவிர ரசிகரான இருந்த ஒரு கவிஞர் தான். சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற இந்திய சுதந்திரத்தின் 25-வது பொன்விழாவில், கண்ணதாசன் தலைமையில் ஒரு கவியரங்கம் நடைபெற்றுள்ளது. இந்த கவியரங்கத்தில் கவிதை வாசித்த ஒருவர் நீங்கள் இனிமேல் குடிக்க கூடாது. அது உங்கள் உடலுக்கு நல்லது இல்லை என்று கூறியுள்ளார்.
இந்த கவியரங்கத்தை முடித்துவிட்டு வந்த கண்ணதாசனுக்கு நீதி படத்தில் இந்த பாடல் எழுத அழைப்பு வருகிறது. அதற்கு ஏற்றார்போல் எம்.எஸ்.வியும் குடி பற்றிய டம்மி வரியை போட்டிருந்ததால், தன்னை குடிக்க கூடாது என்று அன்பு கட்டளையிட்ட கவிஞருக்கும், எம்.எஸ்.விக்கும் ஒரே வார்த்தையில் பதில் அளித்திருந்தார் கண்ணதாசன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“