இன்றைய சினிமாவில் முத்த காட்சி சர்வ சாதாரணம் என்றாலும், க்ளாசிக் காலக்கட்டத்தில் முத்தம் என்ற வார்த்தை வந்தாலே தணிக்கை அதிகாரிகள் கட் செய்துவிடும் நிலை தான் இருந்தது. அந்த சம்பவம் எம்.ஜி.ஆர் நடித்த படத்திலும் நடந்துள்ளது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பரான ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர் நடிப்பில் தயாரித்த முதல் படம் தெய்வத்தாய். தனது சத்யா மூவிஸ் நிறுவனத்தின் மூலம் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த முதல் படமான இந்த படத்தை வித்தியாசமான முறையில் எடுக்க விருப்பப்பட்ட அவர், எம்.ஜி.ஆர் அந்த படத்திற்கு முன்பு நடித்த புராண கதைகளை விடுத்து புதிய கதைக்களத்துடன் இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்தார்.
அதன்படி இந்தியில் வெளியான ஒரு படத்தின் உரிமையை வாங்கி எம்.ஜி.ஆர் நடிப்பில் அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்தார். அதேபோல் இதற்கு முன்பு எம்.ஜி.ஆர் படங்களை இயக்கிய இயக்குனர்கள் இல்லாமல் சிவாஜி நடிப்பில் படங்களை இயக்கிய இயக்குனர் பி.மாதவன் இந்த படத்தை இயக்க ஒப்பந்தமானார். அப்போது கே.பாலச்சந்தர் தனது மேஜர் சந்திரகாந்த் என்ற நாடகத்தை நடத்தினார்.
இந்த நாடகத்தை பார்த்த ஆர்.எம்.வீரப்பன் தெய்வத்தாய் படத்திற்கு வசனம் எழுத கே.பாலச்சந்தரை தேர்வு செய்துள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைக்க, அனைத்து பாடல்களை வாலி எழுதியுள்ளார். இதில் எம்.ஜி.ஆர் சரோஜா தேவி இருவருக்குமாக ரொமான்டிக் பாடலாக ‘’வண்ணக்கிளி சொன்னமொழி என்ன மொழியோ’’ என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த பாடலில், இடையில் அத்திப்பழ கன்னத்தில் முத்தமிடவா என்று எழுதியிருந்தார். இதில் முத்தம் என்று வருவதால், தணிக்கையில் பிரச்சனை வருமோ என்று யோசித்த தயாரிப்பாளர் ஆர்,எம்.வீரப்பன், இது குறித்து பாடல் காட்சி படமாக்கும் முன்பே, தணிக்கை அதிகாரி சாஸ்திரி என்பவரை சந்தித்து, இது குறித்து கேட்டுள்ளார், உங்களுக்கு அவ்வளவு சந்தேகமாக இருந்தால் அந்த வரியை ஏன் வைக்கிறீர்கள் என்று சாஸ்திரி கேட்டுள்ளார்.
சாஸ்திரி அவ்வாறு சொன்னவுடன், தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் வரிகளை மாற்ற சொல்ல, கவிஞர் வாலி, ‘’அத்திப்பழ கன்னத்தில் கிள்ளிவிடவா’’ என்ற எழுதி கொடுத்துள்ளார். அதன்பிறகு இந்த பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“