தமிழ் சினிமாவில் வெண்கல குரலுக்கு சொந்தக்காரர் என்று சொன்னால் அவர் டி.எம்.சௌந்திரராஜன் தான். சிவாஜிக்கு, அவர் மாதிரியும், எம்.ஜி.ஆருக்கு அவர் மாதிரியும் பாடல்கள் பாடி அசத்தியுள்ள இவர், தமிழ் சினிமாவில் 70-க்கு மேற்பட்ட நடிகர்களுக்கு தனது குரலின் மூலம் அவர்கள் பாடுவது போன்றே பாடி அவர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
அதேபோல் கண்ணதாசன் எழுதிய பல பாடல்களுக்கு தனது குரலின் மூலம் உயிர் கொடுத்துள்ள, டி.எம்.சௌந்திரரஜன், எம்.எஸ்.வி இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். அதே சமயம் எம்.எஸ்.விஸ்வநாதன் பலமுறை கேட்டுக்கொண்டும் ஒரு பாடலை மட்டும் தன்னால் பாட முடியாது என்று உறுதியாக இருந்துள்ளார் டி.எம்.சௌந்திரராஜன்.
1972-ம் ஆண்டு பி.மாதவன் இயக்கத்தில் வெளியான படம் பட்டிக்காடா பட்டிணமா. சிவாஜி நாயகனாக நடித்த இந்த படத்தில் ஜெயலலிதா, எஸ்.என்.லட்சுமி, மனோரமா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். கவியரசர் கண்ணதாசன் இந்த படத்திற்கான பாடல்களை எழுதியிருந்தார்.
இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல், ‘’அடி என்னடி ராக்கம்மா’’ என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கும் பாடலாக இருந்து வருகிறது. இந்த பாடலை டி.எம்.சௌந்திரராஜன் பாடியிருந்தார். சினிமாவில் பலதரப்பட்ட பாடல்களை பாடியிருந்தாலும் டி.எம்.எஸ் பக்தி அதிகம் இருக்கும் ஒரு நபராக இருந்துள்ளார்.
தனது பக்தியின் காரணமாக கோவில் விழாக்களில் நடக்கும் கச்சேரிகளில், சினிமா பாடல்களை பாடுவதில்லை என்ற கொள்கையுடன் இருந்துள்ளார். அப்படி இருக்கும்போது ஒருமுறை எம்.எஸ்.வியுடன், கோவில் விழா கச்சேரி ஒன்றுக்கு சென்ற டி.எம்.எஸ்.பக்தி பாடல்களை பாடி அசத்தியுள்ளார். அப்போது எம்.எஸ்.வி, இந்த ‘’என்னடி ராக்கம்மா பாடலை கொஞ்சம் பாடுங்களே என்று கேட்டுள்ளார்.
இதை கேட்ட டி.எம்.எஸ். என்னால் முடியாது. கோவில் விழாக்களில் சாமி பாடல்கள் மட்டும் தான் பாடுவேன் இங்கு சினிமா பாடல்களை என்னால் பாட முடியாது என்று மறுத்துள்ளார். டி.எம்.எஸ். இப்படி சொன்னதால், அவர்கள் இருவருக்கும் இடையெ சிறிய மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. கொள்கை என்று வந்துவிட்டால் அதை எதற்காகவும் என்னால் தளர்த்திக்கொள்ள முடியாது என்று டி.எம்.எஸ்.கூறியுள்ளார்.
டி.எம்.எஸ். ஒரு பாடகராக வளர்ச்சி அடைந்ததில் எம்.எஸ்.விக்கு அதிக பங்கு இருக்கிறது. ஆனாலும் தனது கொள்கைக்காக அவரது பேச்கை தட்டி கழித்துள்ளார் என்று இயக்குனரும் பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“