தமிழ் சினிமாவில் தனது குரல் மூலம் எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாமல் பலருக்கும் அவர்களை போலவே பாடி அசத்தியவர் தான் டி.எம்.சௌந்திரராஜன். வெண்கல குரல் என்று அழைக்கப்படும் டி.எம்.எஸ். பல ஹிட் பாடல்களை கொடுத்திருந்தாலும், அவர் பாடிய பாடல் சரியில்லை என்று கூறி இளையராஜா அந்த பாடலை ஒதுக்கிவிட்டு, எஸ்.பி.பி-யை வைத்து பாட வைத்துள்ளார்.
1979-ம் ஆண்டு யோகானந்த் இயக்கத்தில் வெளியான படம் நான் வாழவைப்பேன். சிவாஜி, ரஜினிகாந்த், கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில் கே.ஆர்.விஜயாவின் பிறந்த நாளில், சிவாஜி கணேசன் பாடுவது போல் ஒரு பாடல் அமைந்திருக்கும். சிவாஜிக்கு ஒரு நோய் இருக்கும். அதற்கு ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டதால், இவளுக்கு நாம் கணவர் ஆவோமா என்ற ஏக்கத்துடனும் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லும் விதமாகவும் இந்த பாடல் அமைந்திருக்கும்.
இளையராஜா இசையமைத்திருந்த இந்த படத்தில் இடம் பெற்ற ‘’என்னோடு பாடுங்கள, நல்வாழ்த்து பாடுங்கள்’’ என்ற வரிகளுடன் தொடங்கும் பாடலை கவிஞர் வாலி எழுதியுள்ளார். இந்த பாடலை முதலில் பாடியவர் டி.எம்.சௌந்திரராஜன் தான். தெய்வீக பாடகர் என்று பெயர் பெற்ற டி.எம்.சௌந்திரராஜன் குரலில் இந்த பாடல் முதலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் டி.எம்.எஸ். குரலில் இந்த பாடலை கேட்ட இசையமைப்பாளர் இளையராஜா தனக்கு இந்த பாடல் பிடிக்கவில்லை திருப்திகரமாக இல்லை என்று ஒதுக்கிவிட்டு அடுத்து எஸ்.பி.பாலசுப்பிரமணியன் குரலில் இந்த பாடலை பதிவு செய்துள்ளார். எஸ்.பி.பி குரலில் இந்த பாடல் மென்மையாகவும், டி.எம்.எஸ்.குரலில் இந்த பாடல் சிறிது நடுக்கத்துடன் கணீர் குரலில் அமைந்திருக்கும்.
இதன் காரணமாகத்தான் இளையராஜா டி.எம்.எஸ் குரலில் பதிவான பாடலை ஒதுக்கவிட்டு எஸ்.பி.பி குரலில் பாட வைத்து அதை படத்தில் சேர்த்திருந்தார். இளையராஜாவின் இந்த மாற்றத்தை பலரும் விமர்சித்திருந்த நிலையில், டி.எம்.எஸை வேண்டுமென்றே இளையராஜா ஒதுக்கவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாக தொடங்கியது. இன்றுவரை அந்த விமர்சனங்கள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“