தமிழ் சினிமாவின் தலைசிறந்த பாடகர்களில் ஒருவராக இருந்த டி.எம்.சௌந்திரராஜன், சிவாஜி படத்தின் ஒரு பாடலுக்கு என்னால் பாட முடியாது என்று சொன்னபின்னரும் அந்த படத்தின் இயக்குனர் வற்புறுத்தியதால் ஒரு ஹிட் பாடலை கொடுத்துள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவில் வெண்கல குரலுக்கு சொந்தக்காரர் என்று சொன்னால் அவர் டி.எம்.சௌந்திரராஜன் தான். சிவாஜிக்கு, அவர் மாதிரியும், எம்.ஜி.ஆருக்கு அவர் மாதிரியும் பாடல்கள் பாடி அசத்தியுள்ள இவர், தமிழ் சினிமாவில் 70-க்கு மேற்பட்ட நடிகர்களுக்கு தனது குரலின் மூலம் அவர்கள் பாடுவது போன்றே பாடி அவர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
அதேபோல் கண்ணதாசன் எழுதிய பல பாடல்களுக்கு தனது குரலின் மூலம் உயிர் கொடுத்துள்ள, டி.எம்.சௌந்திரரஜன், எம்.எஸ்.வி இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.அந்த வரிசையில், டி.எம்.எஸ் தன்னால் பாட முடியாது என்று சொன்னாலும், படத்தின் இயக்குனர் வற்புறுத்து அவரை பாட வைத்து அந்த பாடலை ஹிட் ஆக்கிய சம்பவமும் தமிழ் சினிமாவில் நடந்துள்ளது.
1961-ம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் பாலும் பழமும். சிவாஜி கணேசன், சரோஜா தேவி, சவுக்கார் ஜானகி, எம்.ஆர்.ராதா, பாலையா, பிரேம் நசீர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைக்க, கவியரசர் கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். இந்த படத்தின் ஒரு பாடலை பதிவு செய்ய இசையமைப்பாளர் எம்.எஸ்.வி, இயக்குனர் பீம்சிங் உள்ளிட்ட குழுவினர் தயாராக இருந்துள்ளனர்.
ஆனால் பாடலை பாட வேண்டிய டி.எம்.சௌந்திரராஜன் வெகு நேரமாகியும் வராத நிலையில், போன் செய்து இன்று தன்னால் பாட முடியாது தனக்கு ஜலதோஷம் பிடித்திருக்கிறது. பாடல் பதிவை 2 நாட்களுக்கு தள்ளி வையுங்கள் என்று கூறியுள்ளார். இதை கேட்ட இயக்குனர் பீம்சிங், சிவாஜி இந்த பாடலை மலையில் நடந்தபடி பாடுவது போன்றுதான் படமாக்கப்பட உள்ளது. அதனால் ஜலதோஷத்துடன் பாடினால் சரியாகத்தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு கிளம்பி வந்த டி.எம்.எஸ்.அந்த பாடலை பாடி முடித்துள்ளார். அந்த பாடல் தான் ‘’என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்’’ என்ற பாடல்.இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“