க்ளாசிக் தமிழ் சினிமாவில், தனது குரலின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள பாடகர் டி.எம்.சௌந்திரராஜன், பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருந்தாலும், இளையராஜாவின் இசையில் ஒரு கட்டத்தில் அவருக்கு பாடல் பாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இது ஏன் என்பது குறித்து டி.எம்.எஸ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது குரல் வளத்தின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் டி.எம்.சௌந்திரராஜன். எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முதல் பலருக்கும் தனது தனித்திறமையின் மூலம் திரையில் அவர்கள் பாடுவது போலவே பாடி அசத்திய இவர், எந்த நடிகருக்காக பாடினாலும் திரையில், அந்த நடிகரே பாடும் அளவுக்கு அவர்களின் குரல் போன்ற தோற்த்தில் பாடும் திறன் பெற்றவர்.அதேபோல் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் டி.எம்.சௌந்திரராஜன்.
அதேபோல் க்ளாசிக் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் தொடங்கி, எம்.எஸ்.வி உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் பலருடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள, டி.எம்.எஸ்., இளையராஜாவின் முதல் படமாக அன்னக்கிளி படத்தில், அதனைத் தொடர்ந்து சிவாஜி, ரஜினிகாந்த் ஆகியோரின் படங்களுக்கு இளையராஜா இசையமைத்தபோது, அவர்களுக்காக பாடல்கள் பாடியுள்ளார்.
ஒரு கட்டத்தில், டி.எம்.எஸ்-க்கு வாய்ப்பு கொடுக்காத இளையராஜா, மற்ற பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார். இது குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ள டி.எம்.சௌந்திரராஜன், இளையராஜா இசையில் சிவாஜி படங்களுக்கு பாடியிருக்கிறேன். அன்னக்கிளி படத்தில் அன்னக்கிளியே உன்னை தேடுதே என்ற பாடலை பாடி கொடி ஏற்றி வைத்தேன். அதன்பிறகு சிவாஜிக்கு ‘’நல்லவர்கெல்லாம் சாட்சிகள் இங்கே’’, ரஜினிகாந்துக்காக ‘’நண்டு ஊறுது நரி ஊறுது’’ உள்ளிட்ட பாடல்களை பாடியிருந்தேன்.
இளையராஜா இசையில் அருமையான பாடல்களை பாடியிருக்கிறேன். இப்போது அவர் இசையில் பாடாததற்கு காரணம், நான் குறையாக சொல்லவில்லை. நான் ஒருவருக்கு உதவி செய்கிறேன் என்றால், என்னை பற்றி மற்றவர்கள் பேசினால் தான் நான் உதவி செய்ததற்கான அர்த்தம் இருக்கும். இளையராஜா டி.எம்.செளந்திரராஜனை பாட வைத்தார். ஏகப்பட்ட பாடல்கள் ஹிட் ஆனது. ஆனாலும், இளையராஜா டி.எம்.சௌந்திரராஜனை எவ்வளவு அழகாக பாட வைத்துவிட்டார் என்று யாரும் சொல்லவில்லை.
மாறாக இளையராஜா இசையில் டி.எம்.எஸ் எவ்வளவு அழகாக பாடிவிட்டார் பாருங்கள் என்று சொல்லிவிட்டார்கள். இதுதான் அவர் மனதில் இருந்தது. என்னதான் நான் பாட்டு சொல்லிக்கொடுத்திருந்தாலும்’, இந்த குரலைத்தானே பாராட்டுகிறார்கள் குரலே இல்லாமல் பாட வைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார் இளையராஜா என்று டி.எம்.எஸ். ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil