தான் ஒரு அவசரமான சூழ்நிலையில் இருந்தபோது, பாடல் எழுத அழைத்த ஒரு தயாரிப்பாளரை கவிஞர் வாலி, போனிலேயே கண்டபடி திட்டி தீர்த்துள்ளார். அந்த தயாரிப்பாளர் அப்போது எம்.ஜி.ஆர் படத்தை தயாரிக்க தயாரானதும், அந்த படத்திற்கு தான் வாலி பாடல் எழுத வேண்டும் என்றும் அழைக்கப்பட்டது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் வாலிப கவிஞர் என்று போற்றப்படுபவர் வாலி. எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினி கமல், விக்ரம் சூர்யா, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட இன்றைய நடிகர்களுக்கும் தனது எழுத்தின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, கண்ணதாசன் எம்.ஜி.ஆரை விட்டு பிரிந்தபோது எம்.ஜி.ஆரின் அஸ்தான பாடல் ஆசிரியராக மாறியவர்.
எம்.ஜி.ஆருக்கு பல வெற்றிப்பாடல்களை கொடுத்த வாலி, கடைசி வரை முன்னணி கவிஞராக இருந்தாலும், அவ்வப்போது கோபத்திலும் கொந்தளித்த சம்பவங்களும் நடந்துள்ளது. கடந்த 1972-ம் ஆண்டு கவிஞர் வாலி தனது மனைவியின் பிரசவத்திற்காக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார். அப்போது சிசேரியன் செய்தால் தான் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் வாலி என்ன செய்வது என்று தெரியாமல் இருந்துள்ளார்.
அந்த நேரத்தில், எம்.ஜி.ஆர் ஜெயலலிதா நடிப்பில், கிருஷ்ணன் நாயர் என்பவர் இயக்கத்தில் அன்னமிட்ட கை படம் தயாராகிறது. இந்த படத்தை சிவசாமி என்பவர் தயாரித்திருந்தார். படத்தின் பாடல்கள் பதிவு தொடர்பான வேலைகள் நடந்துள்ளது. பாடல்கள் எழுதுவதற்காக, வாலியை தயாரிப்பாளர் போனில் அழைத்துள்ளார். இன்று பாடல் எழுதி இரவு ரெக்கார்டிங் செய்தால் நாளை ஷூட்டிங் போகலாம் என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட வாலி, என் மனைவிக்கு சிசேரியன் நடக்க உள்ளது. நான் ஃபுல் டென்ஷனில் இருக்கிறேன். இப்போது பாடல் எழுதுவது என்பது முடியாத காரியம். என்று கூறியுள்ளார். இதை கேட்ட தயாரிப்பாளர் சிவசாமி, சிசேரியன் என்ன நீங்களா பண்ண போறீங்க டாக்டர் தானே பண்ணப்போறாங்க என்று கேட்க, கோபமான வாலி, போன கீழ வைடா அடிச்சி ஒடச்சிடுவேன் என்று திட்டி போனை வைத்துள்ளார்.
அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் அங்கு வந்துவிட, போனிலேயே தயாரிப்பாளர் சின்னவர் வந்துவிட்டார் என்று சொல்ல, உன்னிடம் என்ன சொன்னேனோ அதையே ஒரு வார்த்தை மாறாமல் அவரிடம் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு போனை வைத்துள்ளார். மறுநாள் வாலியை சந்தித்த எம்.ஜி.ஆர் பாடல் பதிவை 2 நாட்கள் தள்ளிவைத்துவிட்டேன்.
உங்கள் கோபம் நியாமானது. அந்த தயாரிப்பாளர் அப்படி பேசியிருக்க கூடாது என்று கூறிய எம்.ஜி.ஆர், அதன்பிறகு ஹாஸ்பிட்டலுக்கு வந்து குழந்தையை பார்த்து ஒரு பவுன் தங்க காசு கொடுத்துவிட்டு வாழ்த்தி சென்றதாக வாலி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“