படத்தில் தங்களை பற்றி ஏதேனும் தவறான கருத்துக்கள் இருந்தால், படத்தை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு படம் பார்க்க தியேட்டருக்கு வந்த இஸ்லாமிய சமூகத்தினரை வாலி தனது பாடல்கள் மூலம் அவர்கள் மனதை மாற்றியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், என பன்முறை திறமை கொண்ட சோ ராமசாமி, அரசியல் விமர்சகராகவும், துக்ளக் என்ற பத்திரிககையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அரசியல் தொடர்பான கருத்துக்களை சாதாரணமாக சொல்லி அனைவருக்கும் புரிய வைப்பதில் திறமை வாய்ந்தவரான சோ ராமசாமி, 1971-ம் ஆண்டு முகமது பின் துக்ளக் என்ற படத்தை இயக்கியிருந்தார்.
அரசியல் விமர்சனங்களை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தின் அறிவிப்பு வெளியான உடனே, இஸ்லாமியர்கள் தரப்பில் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனாலும் சோ, நான் படம் எடுக்கிறேன். உங்களுக்கு போட்டு காட்டுகிறேன். அதில் எதாவது தவறு இருந்தால் படத்திற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவியுங்கள் என்று கூறியுள்ளார். இஸ்லாமிய கூட்டமைப்பினரும் இதை ஏற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து படத்தின் திரைக்கதையில் மாற்றம் செய்த சோ, வாலியை அழைத்து பாடல் எழுதுமாறு கூறியுள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த படத்திற்கு அனைத்து பாடல்களையும் வாலி எழுதியுள்ளார். இதில் அல்லா அல்லா என்று தொடங்கும் இந்த பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் தான் பாட வேண்டும் என்று சோ விரும்பியுள்ளார். ஆனால் கடைசிவரை எம்.எஸ்.வி அதற்கு மறுப்பு தெரிவித்து வேறு ஒரு பாடகரை வைத்து பாட வைக்க முடிவு செய்துள்ளார்.
இந்த மோதல் காரணமாக சீட்டு குலுக்கி போட்டபோது எம்.எஸ்.வி பெயரே வந்துள்ளது. அதன்பிறகு இந்த பாடல் எம்.எஸ்.வி குரலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாடல் பதிவு முடிந்தவுடன் தான் சோ எழுதிய அனைத்து சீட்டுகளிலும் எம்.எஸ்.வி பெயரே இருந்துள்ளது தெரியவந்துள்ளது. அதன்பிறகு படம் தயாராகி வெளியானதை தொடர்ந்து இஸ்லாமியர்கள் படத்தை பார்க்க வந்துள்ளனர். படம் தொடங்கும்போதே அல்லாஹூ அக்பர் என்ற பாடலுடன் தொடங்கியதால் இஸ்லாமியர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அரசியல் காமெடி படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று தியேட்டருக்கு வந்த இஸ்லாமியர்களை வாலி - சோ கூட்டணி ஒற்றை பாடலின் மூலம் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“