வாலி பாடல் வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில், பலர் அவரது பாடலை நிராகரித்த நிலையில், அவர்கள் நிராகரித்த பாடல் தான் வாலியை எம்.ஜி.ஆரிடம் சேர்த்து பின்னாளில் அவருக்கு பல பாடல்களை எழுத தூண்டியது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த கவிஞர் வாலி, தான் எழுதிய அத்தனை பாடல்களுக்கும் ஊன்றுகோளாக இருந்தது கவிஞர் கண்ணதாசனின் ஒற்றை பாடல் வரிதான் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் கவிஞர் வாலி. தொடக்கத்தில் பல தடைகளை சந்தித்திருந்தாலும், அதன்பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் எழுதி வெற்றிகளை குவித்தவர். ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் – கண்ணதாசன் இடையே மோதல் ஏற்பட்டபோது, எம்.ஜி.ஆருக்கு அஸ்தான் கவிஞராக மாறியவர் தான் கண்ணதாசன்.
அதே சமயம் கவிஞர் வாலி தனது ஆரம்பகட்டத்தில் சினிமாவில் ஒரு சில பாடல்கள் மட்டுமே எழுதியிருந்த நிலையில், தினமும் பல இசையமைப்பாளர்களை சந்தித்து பாடல் எழுத வாய்ப்பு கேட்டு, தான் எழுதி வைத்திருந்த பாடல்களை கொடுத்துள்ளார். ஆனால் இந்த பாடல் வெற்றி பெறாது என்று எம்.எஸ்.விஸ்வநாதன் உட்பட பல இசையமைப்பாளர்கள் தவிர்த்துள்ளர். ஆனாலும் வாலி தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து வாய்ப்பு தேடி அலைந்துள்ளார்.
அதன்பிறகு சினிமாவில் ஒரு கவிஞராக அந்தஸ்தை பெற்றுவிட்டாலும், வாலி தான் கவிஞராக ஆவதற்கு முன்பே எழுதிய அந்த பாடலை மட்டும் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் நடித்த படகோட்டி படத்தில் பாடல் எழுத வாலிக்கு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளரை சந்தித்து வாலி தனது பாடலை பற்றி சொல்ல, அவரோ அந்த பாடலை பார்த்துவிட்டு, இதை ரெக்கார்டிங் செய்து எம்.ஜி.ஆருக்கு போட்டு காட்டுவோம் அவர் சொன்னால் வைத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
இந்த பாடலை நிராகரித்த இசையமைப்பாளர்களில் ஒருவரான எம்.எஸ்.வி. – ராமமூர்த்தி இருவருமே இந்த பாடலுக்கு இசையமைத்து பாடல் எம்.ஜி.ஆர் பார்வைக்கு செல்கிறது. கண்ணதாசன் காங்கிரஸ் பக்கம் சாய்ந்ததால், அவருக்கு மாற்றாக யாராவது வருவார்களா என்று எதிர்பாத்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர் இந்த பாடலை பார்த்தவுடன், பிடித்துவிட, படத்தில் வைக்குமாறு கூறியுள்ளார். மேலும் இந்த பாடலை எழுதிய வாலியை சந்திக்க வேண்டும் என்றும் கூறி அன்று மாலையே அவரை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு முடிந்தபிறகு, ஒரு அரசியல் கூட்டத்தில் பங்கேற்ற எம்.ஜி.ஆர் இனி என் படங்களுக்கு வாலி தான் பாடல்கள் எழுதுவார் என்று அறிவித்துள்ளார். பல இசையமைப்பாளர்கள் நிராகரித்த இந்த பாடல் மூலம் எம்.ஜி.ஆருக்கு அஸ்தான கவிஞராக மாறிய வாலி, இறுதி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டார். அவர் எழுதிய அந்த பாடல்தான் ‘’கொடுத்ததெல்லாம் கொடுத்தான் யாருக்காக கொடுத்தான்’’ என்ற பாடல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.