நண்பராக இருந்தாலும் இப்படியா? சம்பளம் தராத தயாரிப்பாளரை பாட்டில் விமர்சித்த வாலி : என்ன நடந்தது?
கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர். அதன்பிறகு சினிமாவில் கவிஞராக வாய்ப்பு கிடைத்து முக்கிய இடத்தை பெற்றவர் தான் வாலி.
தமிழ் சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது பாடல்கள் மூலம் வெற்றியை கொடுத்துள்ள கவிஞர் வாலி, தான் பாடல் எழுதியதற்கு சம்பளம் தராத தயாரிப்பாளரை பாட்டில் விமர்சித்து சம்பளத்தை பெற்றுள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. எம.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினி கமல், விஜயகாந்த், சூர்யா சிம்பு வரை 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர். அதன்பிறகு சினிமாவில் கவிஞராக வாய்ப்பு கிடைத்து முக்கிய இடத்தை பெற்றவர் தான் வாலி.
சினிமாவில் கவிஞராக ஒரு அங்கீகாரம் பெற்றுவிட்டாலும், பணத்திற்காக தான் நான் பாடல் எழுதினேன் என்று வாலியே பல மேடைகளில் கூறியுள்ளார். இதில் தான் பாடல் எழுதியதற்காக பணத்தை கொடுக்காத தயாரிப்பாளரான தனது நெருங்கிய நண்பரை படத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப பாடலில் விமர்சித்து, அதுவரை இருந்த மொத்த பாக்கி சம்பளத்தையும் பெற்றுள்ளார் கவிஞர் வாலி.
1968-ம் ஆண்டு ஏ.காசிலிங்கம் இயக்கத்தில் வெளியான படம் சக்கரம். ஜெமினி கணேசன், வென்னிறஆடை நிர்மலா, ஏ.வி.எம்.ராஜன், மனோரமா, நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில் அனைவருமே பணத்தை குறிக்கோளாக கொண்டு செயல்படுவது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு இல்லதாவர்களுக்கு உதவும் ஏ.வி.எம்.ராஜனை பிடித்து கொடுத்தால் ஒரு லட்சம் பணம் என்று அறிவிக்கப்படுகிறது.
தனது அப்பாவின் உடல்நிலை சரி செய்ய ஐம்பது ஆயிரம் பணத்தேவை இருக்கும் ஜெமினி கணேசன் அவரை பிடித்து அந்த ஒரு லட்சத்தை வாங்க முயற்சிக்கிறார். இதற்காக நாகேஷ் உட்பட தன்னுடன் சிலரை சேர்த்துக்கொள்கிறார். ஒரு கட்டத்தில் ஏ.வி.எம்.ராஜனை ஒருநாள் இரவில் பிடித்துவிட, அடுத்த நாள் அவரை போலீசில் ஒப்படைக்க நாகேஷ் வீட்டில் தங்குகின்றனர். நாகேஷ் மனைவி மனேரமா ஏ.வி.எம். ராஜனின் தங்கை. ஆனால் அவரும் அண்ணனை பிடித்து கொடுத்து பணத்தை வாங்க முயற்சிக்கிறார்.
இந்த சூழ்நிலையில் வரும் பாடல் தான் ‘’காசேதான் கடவுளப்பா’’ என்ற பாடல். இந்த படத்தின் தயாரிப்பாளர் கே.ஆர்,பாலன், இதற்கு முன்பு தயாரித்த சில படங்களில் பாடல்கள் எழுதிய வாலிக்கு சம்பளம் கொடுக்காத நிலையில், இந்த படத்திற்கும் சம்பளம் கொடுக்காமல் இருந்துள்ளார். இத்தனைக்கும். கே.ஆர்,பாலன் வாலியின் நெருங்கிய நண்பர். அதனால் அவருக்கு உணர்த்தும்படியும், கதையின் ஓட்டத்திற்கு தகுந்தார் போலும் இந்த பாடலை எழுதியிருப்பார்.
பாடலில் முதல் 2 வரிகளை தவிர மற்ற அனைத்து வரிகளும், டா டா என்று முடியும். ஆனால் முதலில் காசேதான் கடவுளப்பா என்று தொடங்கியிருப்பார். இதனால் சம்பளம் தரவில்லை என்றாலும் அவர் தனது நண்பர் என்னை நினைத்து வாலி ப்பா என்று எழுதியிருப்பார். இந்த பாடல் தன்னைத்தான் குறிக்கிறது என்பதை உணர்ந்த கே.ஆர்.பாலன், உடனடியாக வாலியின் சம்பள பாக்கி அனைத்தையும் தீர்த்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“