கவிஞர் வாலி எழுதிய ஒரு பாடல் பட்டிதொட்டி எங்கிலும் பட்டையை கிளப்பி பெரிய ஹிட் அடித்திருந்தாலும், சக கவிஞர் ஒருவர் இந்த பாடலை எழுதிய வாலியை கடுமையாக விமர்சித்து அவரிடமே கூறியுள்ளார். அது என்ன பாட்டு? அந்த கவிஞர் யார்?
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் தொடங்கி இன்றைய சிம்பு வரை 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்தவர் தான் கவிஞர் வாலி. எம்.ஜி.ஆருக்கு பல தத்துவ மற்றும் அரசியல் பாடல்களை கொடுத்துள்ள வாலி, காலத்திற்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொண்டு பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அவரின் பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் 1994-ம் ஆண்டு வெளியான இந்து படத்தில், அனைத்து பாடல்களையும் வாலி எழுதியிருந்தார். பிரபுதேவா அறிமுகமான இந்த படத்தில் ரோஜா, சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். தேவா இசையமைத்த இந்த படத்தை பவித்ரன் இயக்கியிருந்தார். இந்த படத்தின் அனைதது பாடல்களும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
குறிப்பாக படத்தில் இடம்பெற்ற ‘’சமஞ்சது எப்படி’’ என்ற பாடல் அந்த காலக்கட்டத்தில் பெரிய ட்ரெண்டிங் பாடலாக பட்டிதொட்டி எங்கிலும் ஒலித்துக்கொண்டிருந்தது. இந்த பாடலை எழுதிய வாலி, ஒருமுறை இசையமைப்பாளர் தேவா பிரசாத் ஸ்டூடியோவில் இருந்தபோது அங்கு கவிஞர் பிறைசூடன் இருந்துள்ளார். வாலிக்கும் பிறைசூடனுக்கும் நெருங்கிய நட்பு இருந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொள்வது அவ்வப்போது நடக்கும் ஒரு நிகழ்வு.
அந்த வகையில், வாலி பிறைசூடனிடம், எப்படி ஒய் சமஞ்சது பாட்டு நல்ல போய்க்கிட்டு இருக்கே என்று கேட்க, பிறைசூடன் அமைதியாக இருந்துள்ளார். அதன்பிறகு வாலி மீண்டும் கேட்க, உங்களுக்கு பெண் குழந்தை இல்லை என்று பிறைசூடன் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியாக வாலி, ஒன்றும் பேசாமல் அங்கிருந்து கிளம்பியுள்ளார். பாடல் எழுதி முடித்தவுடன் மீண்டும் பிறைசூடனை பார்த்த வாலி தனது அருகில் அழைத்துள்ளார்.
பிறைசூடன் வந்தவுடன் அவரது நெற்றியில் முத்தம் கொடுத்து, எனக்கு பிறகு நீ நம்பர் ஒன்னாக இருப்பாய் என்று கூறியுள்ளார். அதன்பிறகு ஒருநாள், ஏ.வி.எம். ஸ்டூடியோவில் இருவரும் சந்தித்தபோது, நீ சொன்னது எனக்கு உருத்தலாக இருந்தது என்று வாலி சொல்ல, வயிற்றுக்கு எழுதவேண்டிய பிறைசூடனே நெஞ்சுக்கு எழுதும்போது, நெஞ்சுக்கு எழுத வேண்டிய வாலி இப்போது எதற்காக வயிற்றுக்கு எழுதுகிறார் என்று பிறைசூடன் கேட்டுள்ளார்.
மேலும் இந்த மாதிரியான பாடலை, என்னை மாதிரி வளர்ந்து வரும் கவிஞர்கள் எழுத வேண்டும். ஆனால் நீங்கள் அந்த பாடல் எழுத வேண்டிய கட்டத்தை தாண்டிவிட்டீர்கள். நீங்கள் இந்த உலகத்திற்கு சொல்ல வேண்டிய கருத்துக்கள் நிறைய இருக்கிறது. ஒரு மகாகவியாக இருக்கும் நீங்கள் சமஞ்சது எப்படி என்று எழுத கூடாது. என்னைப்போல் சினிமாவில் முயற்சி செய்பவர்கள் தான் எழுத வேண்டும் என்று கூறியுள்ளார் பிறைசூடன். அதன்பிறகு அவருக்கு அந்த ஆண்டு கவிஞர்களுக்கு கொடுக்கும் பரிசுத்தொகையை கொடுத்து கவுரவித்துள்ளார் வாலி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.