க்ளாசிக் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்காக பல ஹிட் பாடல்களை கொடுத்து அவரின் அஸ்தான கவிஞராக வலம் வந்த வாலி, எம்.ஜி.ஆருக்காக அவர் எழுதிய முதல் பாடல் படத்தில் இடம்பெறுவதில் பல சிக்கல்களை சந்தித்துள்ளது பலரும் அறியாத ஒரு தகவலாக உள்ளது.
1961-ம் ஆண்டு பா.நீலகண்டன் இயக்கத்தில் வெளியான படம் நல்லவன் வாழ்வான். எம்.ஜி.ஆர் ராஜசுலோக்ஷனா இணைந்து நடித்திருந்தனர். எம்.ஆர்.ராதா நம்பியார் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு முன்னாள் முதல்வர் அண்ணா கதை திரைக்கதை எழுதியிருந்தார். படத்திற்கு டி.ஆர்.பாப்பா என்பவர் இசையமைத்திருந்தார். த்ரில்லர் பாணியில் வெளியான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த படத்தில் 8 பாடல்கள் இடம்பெற்றிருந்த நிலையில், 2 பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார். மேலும் கவிஞர் வாலி எம்.ஜி.ஆர் படத்திற்கு முதன் முதலாக எழுதியது இந்த படம் தான். படத்தில் எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் என்ற பாடல் பல சோதனைகளை கடந்து படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த பாடலை எழுதி கொடுத்துவிட்ட வாலி, முதல்முறையாக எம்.ஜி.ஆருக்கு பாடல் எழுதிய சந்தோஷத்தில் இருக்கிறார்.
பாடல் முதல்முறையாக பதிவு செய்யப்பட்டபோது, தபேளா வாசிப்பவர் சத்தம் அதிகமாக இருந்துள்ளது. இதை கவனித்த எம்.ஜி.ஆர் இதில் தபேளா சத்தம் அதிகமாக உள்ளது. இது வேண்டாம் மீண்டும் ஒருமுறை பதிவு செய்யுங்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து 2-வது முறையாக பாடல் பதிவு தொடர்பான பணிகள் நடைபெற்றபோது, பாடல் பாடிய சீர்காழி கோவிந்தராஜன் வந்துவிட, பாடகி பி.சுசிலா காய்ச்சல் காரணமாக வரவில்லை. இதனால் அன்று பாடல் பதிவு நடைபெறவில்லை.
இதன் காரணமாக வாலி சோகத்தில் இருந்தபோது சில நாட்கள் கழித்து பாடல் பதிவு நடந்துள்ளது. இந்த முறை சரியாக பாடல் பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று மகிழ்ச்சியில் இருந்த வாலிக்கு பாடல் ஷூட்டிங்கின்போது எம்.ஜி.ஆர் அந்த மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த பாடல் காட்சிக்காக ஒரு அருவி செட் போட்டுள்ளனர். அதில் இருந்து நடனம் ஆடும்போது எம்.ஜி.ஆர் தவறுதலாக எதையோ செய்ய அருவி செட்டில் ஓட்டை விழுந்து தண்ணீர் வெளியே சென்றுவிட்டது.
இதனால் கோபமான எம்.ஜி.ஆர் செட்டை சரி பண்ணுங்க அதன்பிறகு கால்ஷீட் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். பாடல் பதிவு முடிந்து ஷூட்டிங்கில் இப்படியா என்று வாலி யோசித்துக்கொண்டிருக்க, என்னப்பா நீ வந்த நேரம் இப்படி இருக்கு என்று கூறிய உதவியாளர் ஒருவர், நல்லபடியா முடியனும்னு வேண்டுதல் வச்சிக்கோ என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். அதன்பிறகு வாலி இந்த பாடல் திரையில் வந்தால் முடி காணிக்கை செலுத்துவதாக திருப்பதிக்கு வேண்டியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து 10 நாட்கள் இடைவெளியில் செட் சரி செய்யப்பட்டு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி வெற்றிகரமாக முடிந்துவிட்ட நிலையில், சென்சார் அதிகாரிகள் வாலியின் பாடலில் உதயசூரியன் மற்றும் அண்ணாவின் பெயர்கள் வருவதாக சொல்லி பாடலை தடை செய்துள்ளனர். அதன்பிறகு பேசி சில கட்கள் மட்டும் கொடுக்கப்பட்டு வாலியின் பாடல் திரையில் வந்தது. வேண்டிக்கொண்டபடி வாலி முடி காணிக்கையும் செலுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.