நடிகை சரோஜா தேவி முக்கிய கேரக்டரில் நடித்த ஒரு படத்தில் நடிகர் வடிவேலு அவரை கலாய்ப்பதுபோல் சொன்ன ஒரு வசனம் காரணமாக உதவி இயக்குனர் ரமேஷ் கண்ணாவிடம் சரோஜா தேவி கோபமாப பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடியில் உச்சம் தொட்டவர் நடிகர் வடிவேலு. பல முன்னணி நடிகர்களுக்கு தனது காமெடியின் மூலம் வெற்றிக்களை கொடுத்த வடிவேலு, இன்று பட வாய்ப்பு இல்லாமல் இருந்தாலும், அவரை பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது சூர்யாவுடன், வடிவேலு இணைந்து நடித்த ஆதவன் படத்தின் ஒரு காட்சியில், அந்த படத்தில் நடித்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவியை கிண்டல் செய்வது போல் வடிவேலு வசனம் பேசியிருப்பார்.
தமிழ் சினிமாவில், குறுகிய பட்ஜெட் படங்களை இயக்கி பெரிய வெற்றியை கொடுத்தவர் தான் கே.எஸ்.ரவிக்குமார். 1990-ல் வெளியான புரியாத புதிர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், தற்போது படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அதே சமயம் தமிழ் சினிமாவின் இரு துருவங்கள் என்று அழைக்கப்படும், ரஜினிகாந்த் - கமல்ஹாசன் நடிப்பில் பல படங்களை இயக்கியவர். இவர்கள் இருவரையும் இணைத்து படம் இயக்க தகுதியான இயக்குனர் இவர் தான் என்றும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் இருந்தது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான படம் தான் ஆதவன். சூர்யா நயன்தாரா இணைந்து நடித்த இந்த படத்தில், மலையாள நடிகர் முரளி சூர்யாவின் அப்பா கேரக்டரில் நடித்திருந்தார். அதேபோல், பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இந்த படத்தில் சூர்யாவின் பாட்டி கேரக்டரில் நடித்திருந்தார். வடிவேலு, ரமேஷ் கண்ணா, ஆனந்த் பாபு, மனோபாலா ஆகியோர் நடித்திருந்த இந்த படத்திற்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். படத்தில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் ஒரு காட்சியில், ஒருவருக்கு சரோஜா தேவி பற்றிய விளக்கம் கொடுக்கும் நடிகர் வடிவேலு, மேலே போ ஒரு அம்மா ஃபுல் மேக்கப்புடன் படுத்திருக்கும் என்று சொல்வார். இது ஸ்ரிப்டில் இல்லாத வசனம். வடிவேலு தான் சொந்தமாக இந்த வசனத்தை பேசியுள்ளார். இதை படத்தில் பார்த்த, நடிகை சரோஜா தேவி, உடனடியாக இந்த படத்திற்கு கதை எழுதிய ரமேஷ் கண்ணாவிடம் போன் செய்து, நான் உங்களிடம் நடிக்க வாய்ப்பு கேட்டேனா? நீங்களா வந்தீங்க, நடிக்க கூப்டீங்க, இப்போ மேக்கப் போட்டிருக்கிறேனு கிண்டல் பண்றீங்க என்று கேட்டுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியான ரமேஷ் கண்ணா, தெரியாமல் நடந்துவிட்டது என்று சொல்லி அவரை சமாளித்துள்ளார். இது குறித்து ரமேஷ் கண்ணாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.