சினிமாவில் பாடல் எழுத வேண்டும் என்று முயற்சித்துக்கொண்டு இருந்த கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு, அவரது மனைவி முதல் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு முதல் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்பிறகு என்ன நடந்தது?
தமிழ் சினிமாவில் போற்றப்படும் கவிஞர்களில் முக்கியமானவர் கவிப்பேரரசு வைரமுத்து. தனது எழுத்தின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இவர், ஆரம்பத்தில் திருத்தி எழுதிய தீர்ப்புகள் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை படித்து பார்த்து இதனை வெளியிட வேண்டும் என்று நினைத்த, அவ்வை நடராஜன், கலைஞன் பதிப்பகம் மாசிலாமணியிடம், வைரமுத்துவை அறிமுகம் செய்து வைக்கிறார்.
அதன்பிறகு, சினிமாவுக்கு போஸ்டர் டிசைன் செய்யும் உபால்ட் என்பரிடம் வைரமுத்துவை அறிமுகம் செய்து வைத்த மாசிலாமணி, பாரதிராஜாவிடம் சொல்லி இவருக்கு வாய்ப்பு வாங்கி கொடுங்கள் என்று சொல்ல, அவரும் பாரதிராஜாவிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். அன்றைய காலக்கட்டத்தில் சினிமா போஸ்டர்கள் டிசைன் செய்வதில் முன்னணியில் இருந்த உபால்ட், பாரதிராஜாவிடம் நெருங்கிய நட்பில் இருந்துள்ளார். அதன் மூலம் வைரமுத்துவை அவரிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
முதல் சந்திப்பில் வைரமுத்துவின் கவிதைகளை பார்த்து வியந்த பாரதிராஜாவிடம், முடிந்தால் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று வைரமுத்து கூறியுள்ளார். இந்த கர்வத்தை பார்த்து ஆச்சரியமடைந்த பாரதிராஜா, உங்களுக்கு கண்டிப்பாக எனது அடுத்த படத்தில் வாய்ப்பு இருக்கிறது. என்று கூறியுள்ளார். அப்போது அவர் கொடுத்த திருத்தி எழுதிய தீர்ப்புகள் என்ற புத்தகத்தையும் வாங்கிக்கொண்ட பாரதிராஜா, அதனை தனது பையில் வைத்துக்கொண்டுள்ளார்.
அதன்பிறகு இலங்கையில் நடந்த கல்லுக்குள் ஈரம் படத்தின் படப்பிடிப்புக்காக சென்றபோது அந்த புத்தகத்தை படித்து வியந்து வைரமுத்துவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளார். அடுத்து வைரமுத்து தனது மனைவியின் தலை பிரசவத்திற்காக, அவரை மருத்துவமனையில் அனுமதித்திருந்தபோது, பாரதிராஜாவின் உதவியாளர் வைரமுத்துவுக்கு போன் செய்து ஹோட்டல் பெயர் மற்றும் அறையை சொல்லி, அங்கு வருமாறு கூறியுள்ளார். மனைவியின் பிரசவத்தையும் பொருட்படுத்தாமல் வைரமுத்து அங்கே சென்றுள்ளார்.
அப்போது இளையராஜா அவருக்கு கொடுத்த மெட்டை வைத்து அவர் எழுதிய பாடல் தான் ‘பொன்மாலை பொழுது’ என்ற பாடல். அதே சமயம் இந்த பாடல் மூலம் இளையராஜாவின் கவனத்தை ஈர்த்த வைரமுத்து பாரதிராஜாவை விட, இளையராஜாவுக்கு நெருக்கமானவராக மாறினார். இதன் காரணமாக இளையராஜாவும் அடுத்தடுத்து வைரமுத்துவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அந்த வகையில் சூலம், காளி உள்ளிட்ட படங்களில் வைரமுத்து பாடல்கள் எழுதினார்.
நிழல்கள் படத்தில் வரும் பொன்மாலை பொழுது என்ற பாடல் தான் வைரமுத்து எழுதிய முதல் பாடல் என்றாலும், முதலில் பதிவான பாடல், சூலம் படத்தில் வரும், சூலம் என்று தொடங்கும் பாடல் தான். அதே சமயம் வைரமுத்து எழுதி முதலில் வெளியான பாடல், காளி படத்தில் வரும், காளி பத்ரகாளி என்ற பாடல்தான். பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கால்ஷீட் இல்லாததால், வைரமுத்து எழுதிய முதல் பாடலான பொன்மாலை பொழுது பாடல் பதிவு செய்ய தாமதமாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“