கவிஞர் வாலி கண்ணதாசனுக்கு போட்டியாக இருக்கிறார் என்று அவரின் பெயரை கெடுக்க நினைத்த தனது உதவியாளரை கண்ணதாசன், அறைந்துவிட்டு, அவரையே வாலிக்கு காவலாக வைத்துவிட்டு வீடு திரும்பியுள்ளார் கண்ணதாசன்.
தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர். இருவருக்கும் இடையில் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர். அதேபோல் ஒரு கலக்கட்டத்தில் கண்ணதாசன் எழுத வேண்டிய ஒரு பாடல் கவிஞர் வாலிக்கு வந்தது அனைவரும் அறிந்த ஒரு தகவல்.
அதே சமயம் வாலி வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் அவர், எழுத வேண்டிய ஒரு பாடலை கண்ணதாசன் எழுதியுள்ளார். சினிமாவில் வாய்ப்பு தேடிய கவிஞர் வாலி, வாய்ப்பு கிடைக்காத விரக்தியில், தனது நண்பருடன் டிவிஎஸ் கம்பெனியில் வேலைக்கு சேர மதுரை கிளம்பியுள்ளார். அப்போது கண்ணதாசன் எழுதிய ''மயக்கமா கலக்கமா'' என்ற பாடலை கேட்ட வாலி மதுரை செல்லும் எண்ணத்தை கைவிட்டு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்துகொண்டு இருந்துள்ளார்.
அதன்பிறகு இதயத்தில் நீ படத்தில் தொடங்கி, எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள கவிஞர் வாலி, 1968-ல் கண் மலர் என்ற படத்திற்காக ஓதுவார் என்ற பாடலை எழுதியுள்ளார், இந்த பாடல் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பிறகு அமெரிக்கா செல்வதற்கு முன்பாக வாஹினி ஸ்டூடியோவில், கண்ணதாசன் வாலியை சந்தித்துள்ளார், அப்போது நான் இறந்தால் நீதான் பாட வேண்டும் என்று கூறியுள்ளார்.
அந்த அளவுக்கு இருவருக்கும் இடையே நெருக்கமான நட்பு இருந்த நிலையில், கவிஞர் வாலி, சினிமாவில், உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த சமயத்தில், கவிஞர்கள் அனைவருக்கும் கண்ணதாசன் ஒரு விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். அப்போது கவிஞர் வாலிக்கும் அழைப்பு வர, அவரும், நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். விலைமாதுக்கள் அதிகம் வரும் ஒரு விடுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், நள்ளிரவுக்கு மேல் பல கவிஞர்கள் வீடு திரும்பிவிட்ட நிலையில், ஒரு சிலர் விலைமாதுவுடன் அறையில் தங்கியுள்ளனர்.
அப்போது கண்ணதாசனுக்கு நெருக்கமான ஒருவர், வாலி இருக்கும் அறைக்கு அருகில், கண்ணதாசனிடம், அண்ணே வாலி உங்களுக்கு போட்டியாக வந்துகொண்டு இருக்கிறார். இப்போது அவர் இங்கு இருப்பதை போலீஸிடம் சொல்லிவிட்டால், நாளை அவரது பெயர் பேப்பரில் வந்துவிடும். அவர் பெயர் கெட்டுவிடும். எம்.ஜி.ஆர் அவரிடம் பாடல் எழுதும்படி கேட்கமாட்டார் என்று கூறியுள்ளார். இதை கேட்ட கண்ணதாசன் அவரை பளார் என்று அறைந்துள்ளார்.
எனக்கு போட்டியாக யார் வந்தாலும், எனது தமிழின் மூலம் நான் அவர்களை எதிர்ப்பேன். இப்படி நம்பி வந்தவர்களை ஏமாற்றமாட்டேன். அவர் என்னை நம்பி வந்துவிட்டார். அவரை பத்திரமாக நான் தான் அனுப்பி வைக்க வேண்டும். நீ இங்கேயே இரு அவர் வெளியில் வந்தவுடன் அவரை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பிவிட்டு என்னிடம் சொல் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார். இதை கதவுக்கு அருகில் இருந்து கேட்ட வாலி, கண்கலங்கியபடி அங்கிருந்து வெளியேறியுள்ளார்.