தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பெற்று மக்கள் மத்தியில் வரவேற்பினை பெற்ற நடிகர் விஜயகாந்த், தனது சினிமா வாழ்க்கையில் ஆரம்ப கட்டத்தில், படத்தின் நாயகி வந்துவிட்டார் என்பதால், சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது பாதியில் எழுப்பப்பட்டார் என்ற தகவல் இன்றுவரை பரவி வருகிறது. இதன் உண்மை தன்மை என்ன?
1979-ம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜயகாந்த், அதே ஆண்டு அகல்விளக்கு என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தில் தனுஷ்கோடி என்ற கேரக்டரில் விஜயகாந்த் நடிக்க, அவருக்கு ஜோடியாக அப்போது முன்னணி நடிகையாக இருந்த ஷோபா நடித்திருந்தார். இளைரயாஜா இசையமைத்த இந்த படத்தை எழுதி இயக்கியவர் ஆர்.செல்வராஜ்.
ஆர்.சி.அசோக் என்பவர் இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தில் விஜயகாந்த் நடிப்பதை விரும்பாத அவர், வேறு ஒரு நடிகரை வைத்து இந்த படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். ஆனால் இயக்குனரும் கதாசிரியருமான ஆர்.செல்வராஜ் இந்த படத்தில் விஜயகாந்த் தான் நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்ததால், வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பிறகு படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இதனிடையே ஒருநாள் நடிகை ஷோபா காலையில் படப்பிடிப்புக்கு வராமல், மதிய உணவு இடைவேளையில் வந்துள்ளார். அப்போது தயாரிப்பாளர் ஷோபா தொடர்பான காட்சிகளை முதலில் படமாக்குங்கள் என்று இயக்குனர் ஆர்.செல்வராஜூவிடம் கூறியுள்ளார் இதை கேட்ட அவர், முதலில் ஷோபா நடிக்கும் காட்சிகளை படமாக்கினால், விஜயகாந்தை இந்த படத்தில் இருந்து நீக்க வாய்ப்பு உள்ளது. அதனால் விஜயகாந்த் ஷோபா தொடர்பான காட்சிகளை படமாக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.
இதனால் உடனாடியாக விஜயகாந்தை அழைத்து வருமாறு கூறியுள்ளார். அந்த நேரத்தில் விஜயகாந்த் சாப்பிட்டுக்கொண்டிருந்தால், அவரை அழைக்க சென்றவர்கள் ஹீரோயின் வந்துட்டாங்க வாங்க வாங்க என்று பாதி சாப்பாட்டில் எழுப்பி அழைத்து வந்துள்ளனர். இந்த சம்பவம் தெரியாத சிலர் விஜயகாந்த் புதுமுகம் என்பதால், அவரை பாதி சாப்பாட்டில் எழுப்பி நடிக்க வைத்தார்கள் என்று கூறி வருகின்றனர். உண்மையில் விஜயகாந்த் திரை வாழ்க்கையின் நலன் கருதி இயக்குனர் இந்த செயலை செய்துள்ளார் என்று பத்திரிக்கையாளரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“