தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த விஜயகாந்த் சினிமாவில் அனைவருக்கும் சமமான சாப்பாடு என்ற நடைமுறையை கொண்டு வந்த நிலையில், கூடவே கடலை மிட்டாய் கொடுக்கும் வழக்கத்தையும் கொண்டு வந்துள்ளார். இந்த வழக்கத்திற்கு அவருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி, குறுகிய காலத்தில் அரசியலில் எதிர்கட்சி தலைவராக உயர்ந்தவர் தான் விஜயகாந்த். தான் ஒரு வேளை சாப்பாட்டுக்காக கஷ்டப்பட்ட காலத்தை நினைத்து பார்த்து தன்னை நாடி வரும் அனைவருக்கும் இலவசமாக சாப்பாடு போட்டி விஜயகாந்த், சினிமா படப்பிடிப்பின்போது, அனைவருக்கும் சமமான சாப்பாடு என்ற வழக்கத்தை கொண்டு வந்தார்.
80-களின் இறுதியில், கமல்ஹாசனின் நாயகன், மற்றும் விஜயகாந்தின் உழவன் மகன் படத்தின் ஷூட்டிங் ஒரே இடத்தில் நடந்தபோது, விஜயகாந்த படப்பிடிப்பில் ஊழியர்களுக்கு கறிவிருந்து வைக்கப்பட்ட நிலையில், கமல்ஹாசனின் நாயகன் படப்பிடிப்பில், தயிர் மற்றும் தங்காளி சாதம் பொட்டலங்களாக ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டது. ‘அந்த வகையில், அனைவரும் சமம் என்பதை உணர்த்திய விஜயகாந்த், மதிய உணவு இடைவேளைக்கு பின் கடலை மிட்டாய் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த வழக்கத்திற்கு அவருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் இயக்குனரும் தயாரிப்பாளருமான ராம நாராயணன் தான். சினிமாவில் தான் அறிமுகமான காலக்கட்டத்தில ராம நாராயணனின் பல படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், தனது நெருங்கிய நண்பரான சந்திரசேகருடன் இணைந்து அந்த படங்களில் நடித்துள்ளார். ராம நாராயணன் இயக்கும் படங்களில் விஜயகாந்த் இருந்தால் அதில் கண்டிப்பாக வாகை சந்திரசேகர் இடம் பெறுவார். காரைக்குடியை சேர்ந்த ராம நாராயணன், செட்டிநாடு உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்.
அப்படி ஒருநாள், படப்பிடிப்பில் மதிய உணவு இடைவேளையின்போது, படப்பிடிப்பில் இருந்த அனைவருக்கும் ராம நாராயணன், கடலை மிட்டாய் கொடுத்துள்ளார். இதை பார்த்த வாகை சந்திரசேகர் எதற்காக இது என்று கேட்டபோது, சும்மா சாப்பிடுங்க. நல்லா இருக்கும் மதிய உணவுக்கு பின் இனிப்பு சாப்பிட வேண்டும். ஆனால் அது இனிப்பாக இருந்தால் தெகட்டும். இந்த மாதிரி கடலை மிட்டாய் தெகட்டாது நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த விஷயம் பிடித்துபோன விஜயகாந்த், தனது படப்பிடிப்பில் இந்த வழக்கத்தை கடைபிடித்துள்ளார். இந்த தகவலை சமீபத்தில் வாகை சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“