சிவாஜி நடிப்பில் வெளியான பாகப்பிரிவினை படத்தில் கண்ணதாசன் பாடல் எழுத மறுத்த நிலையில், அவரை பஞ்சு அருணாச்சலம் சம்மதிக்க வைத்து பாடல் எழுத வைத்துள்ளார். அவர் எழுதிய 3 பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்று போற்றப்படும் நடிகராக சிவாஜி கணேசன் நடிப்பில் கடந்த 1959-ம் ஆண்டு வெளியான படம் பாகப்பிரிவினை. சிவாஜியுடன், சரோஜா தேவி, எம்.ஆர்.ராதா, நம்பியார், பாலையா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்திருந்த நிலையில், சிவாஜி பட நிறுவனம் படத்தை வெளியிட்டது.
ஒரு கை விளங்காமல் இருக்கும் சிவாஜி, தாழ்வுமனப்பான்மையால் இருந்து வரும் நிலையில், அவர் குடும்பத்தில் உள்ளவர்களே, அவரை ஏளனம் செய்யும் நிலை ஏற்படுகிறது. இதில் இருந்து அவர் எப்படி மீண்டார் என்பது தான் படத்தின் கதை. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிறந்த நடிப்பில் வெளியான 10 படங்களை எடுத்துக்கொண்டால் அதில் பாகபிரிவினை நிச்சயமாக முக்கிய இடத்தில் இருக்கும்.
இந்த படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம் பெற்றிருந்தது. இதில் 2 பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும் ஒரு பாடலை மருதகாசியும் எழுதியிருந்த நிலையில், மீதி 4 பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். ஆனால் இந்த படத்தில் முதலில் பாடல் எழுத கவியரசர் கண்ணதாசன் மறுத்துள்ளார். அந்த காலக்கட்டத்தில் சிவாஜி படங்களுக்கு பட்டுக்கோட்டை தான் பாடல்கள் எழுதி வந்துள்ளார்.
அதேபோல், சிவாஜி – கண்ணதாசன் இடையே மோதல் இருந்ததால், பாகப்பிரிவினை படக்குழு அவரை பாடல் எழுத தொடர்புகொண்டபோது அவர் பாடல் எழுத மறுத்துள்ளார். அப்போது கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த பஞ்சு அருணாச்சலம், இந்த படத்திற்கு நாம் பாடல் எழுதுவோம் என்று சொல்ல, வேண்டாம், நாம் பாடல் எழுதி அதை சிவாஜி வேண்டாம் என சொல்லிவிட்டால், நமக்கு சங்கடம் என கூறியுள்ளார் கண்ணதாசன்.
இதை கேட்ட பஞ்சு அருணாச்சலம், அவர் பாடல் வேண்டாம் என்று சொன்னால் அது நமக்கு மட்டும் சங்கடம் இல்லை. அந்த படக்குழுவுக்கும் சங்கடம் தான் என்று சொல்ல, அதன்பிறகு யோசித்த கண்ணதாசன் அப்போதும் வேண்டாம் என்றே கூறியுள்ளார். ஆனாலும் விடாத பஞ்சு அருணாச்சலம், சிவாஜிக்கு தெரியாமலா இவர்கள் உங்களை வந்து பாடல் எழுத கேட்டிருப்பார்கள் என்று சொல்ல, அதன்பிறகு யோசித்த கண்ணதாசன், சரி இந்த படத்திற்கு நாம் பாடல் எழுதுவோம் என்று கூறியுள்ளார்.
அப்படி கண்ணதாசன் எழுதிய 3 பாடல்களும், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பாக ‘’தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்,’’ ‘’தாழையாம் பூமுடிச்சி’’ ஆகிய 2 பாடல்களும் இன்றைய காலக்கட்டத்திலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பின் கண்ணதாசன் தொடர்ந்து சிவாஜி படத்திற்கு பாடல் எழுதி வந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“