70-களின் இறுதியில் திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா பல முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைத்திருந்த நிலையில், அவருக்கு இணையாக பல ஹிட் பாடல்கள் கொடுத்தவர்கள் தான் சங்கர் கணேஷ். அதே சமயம் இளையராஜா போல் எங்களால் இசையமைக்க முடியும் என்று கூறி இளையராஜா இசையமைக்க முடியாத படத்திற்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளனர்.
Advertisment
1970-களில் நடுப்பகுதியில் வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா முதல் படத்திலேயே முத்திரை பதித்த இசையமைப்பாளராக மாறியிருந்தார். அதன்பிறகு தொடர் ஹிட் படங்களை கொடுத்த அவர், 90-களில் தொடக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமாவதற்கு முன்புவரை பல ஹிட் படங்களுக்கு தனது இசையின் மூலம் வெற்றியை உறுதி செய்துள்ளார். 80-களில் இளையராஜா இசை இருந்தால் படம் வெற்றி என்ற நிலை தான் இருந்தது.
பல முன்னணி இயக்குனர்கள், இளையராஜா கால்ஷீட்டுக்காக வரிசையில் காத்திருந்த சமயத்தில், 2-ம் தர இயக்குனர்கள் சங்கர் கணேஷ் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர். அந்த வகையில் கடந்த 1990-ம் ஆண்டு வெளியான படம் இதய தாமரை. கார்த்திக் ரேவதி நிழல்கள் ரவி ஆகியோர் இணைந்து நடித்த இந்த படம், ரேவதி திருமணமாகி நடித்த முதல் படமாகும். இந்த படத்திற்கு இசையமைக்க இளையராஜாவிடம் கேட்டுள்ளனர். அப்போது பிஸியாக இருந்த இளையராஜா, தன்னால் இசையமைக்க முடியாது என்று கூறியுள்ளார்.
இதன் காரணமாக படத்தின் இயக்குனர் ராஜேஷ்வர் சங்கர் கணேஷிடம் இசையமைக்க சொல்லலாம் என்று சொல்ல, படத்தின் தயாரிப்பாளருக்கு அதில் உடன்பாடு இல்லை. ஆனாலும் வேறு வழி இல்லாமல் ஒப்புக்கொள்ள, படத்தின் இயக்குனர் ராஜேஷ்வர், சங்கர் கணேஷிடம் தயாரிப்பாளர் சொன்னதை கூறியுள்ளார். இதை கேட்ட அவர்கள் இளையராஜா போல் நாங்களும் இசையமைப்போம். ஆனால் எங்களுக்கான பட்ஜெட் சரியாக ஒதுக்கப்படவில்லை. நீங்கள் சரியான பட்ஜெட் கொடுத்தால், அவரை போன்று நாங்களும் ஹிட் பாடல்களை கொடுப்போம் என்று கூறியுள்ளனர்.
Advertisment
Advertisement
அதன்படி, ராஜேஷ்வர், சங்கர் கணேஷ் கேட்ட பட்ஜெட்டை கொடுக்க, இதய தாமரை படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, இன்றுவரை போற்றப்படுகிறது. குறிப்பாக இதில் உன்னை ஏன் சந்தித்தேன் ஊமை நான் சிந்தித்தேன் என்ற பாடல் பெரிய ஹிட்டாக அமைந்தது. இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருந்தார். இந்த பாடலில் ஒரு வரியை மட்டும், வைரமுத்து எவ்வளவோ சொல்லியும் அந்த வரியை மாற்ற வேண்டும் என்று ஒரு உதவி இயக்குனர் கூறியுள்ளார்.
உன்னை ஏன் சந்தித்தேன், ஊமை நான் சிந்தித்தேன், நானாக நான் மாறவா ஆணாக நான் மாறவா என்று வைரமுத்து எழுதியிருப்பார். இதில் ஆணாக நான் மாறவா என்ற வரியை எடுத்துவிட்டு, வேறு வரியை எழுதுமாறு உதவி இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார். நான் பெண்ணாக இருப்பதால் தான் என்னை திருமணம் செய்ய முயற்சிக்கிறாய், எனக்கு பல பிரச்சனை இருக்கிறது. நான் ஆணாக மாறிவிட்டால் பிரச்சனை இல்லாமல் இருவரும் நட்பாக இருக்கலாம் என்று தனது வரியில் கூறியிருப்பார் வைரமுத்து. ஆனால் உதவி இயக்குனர் அடம் பிடித்ததால், அந்த வரியை வேறாக நான் மாறவா என்று மாற்றியிருப்பார். விளரி யூடியூப் சேனலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“