தனது நெருங்கிய நண்பரான எம்.ஜி.ஆருடன் எழுந்த மோதல் காரணமாக பேசாமல் இருந்த கண்ணதாசன், இயக்குனரின் வற்புறுத்தலால் எழுதிய ஒரு பாடல் மொத்த பகையையும் தீர்த்து வைத்து, மீண்டும் கண்ணதாசன் – எம்.ஜி.ஆர் நட்பு தொடர காரணமாக அமைந்துள்ளது. அந்த பாடல் என்ன?
சிவாஜி கணேசன் நடிப்பில், தங்கமலை ரகசியம், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், பலே பாண்டியா, கர்ணன் என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் பி.ஆர்.பந்தலு. பெரும்பாலும் சிவாஜி வைத்து படம் இயக்கிய இவர், கடைசியாக 1964-ம் ஆண்டு வெளியான முரடன் முத்து என்ற படத்தை இயக்கியிருந்தார். அதேபோல் முரடன் முத்து படத்திற்கு பின் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்ட பி.ஆர்.பந்தலு, தனது நண்பர்களின் ஆலோசனையை கேட்டு, எம்.ஜி.ஆரை வைத்து படம் இயக்க அவரிடம் கால்ஷீட் கேட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர் உடனடியாக கால்ஷீட் கொடுக்க அப்போது உருவான படம் தான் ஆயிரத்தில் ஒருவன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நம்பியார். நாகேஷ் ஆகியோர் இணைந்து நடித்த இந்த படத்திற்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். இந்த படம் தமிழ் சினிமாவில் அப்போது பெரிய வெற்றியை பெற்ற நிலையில், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் உருவான காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர் – கண்ணதாசன் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இதனால் அவரை தவிர்த்து கவிஞர் வாலி அனைத்து பாடல்களையும் எழுதுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த படத்தில் அடிமைகளை மீட்டு அழைத்து வரும்போது அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு பாடல் எழுத வேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்காக, வாலி உட்பட பல கவிஞர்கள் இந்த பாடலை எழுதுகின்றனர். ஆனால் இயக்குனர் பந்தலு – எம்.எஸ்.வி ஆகிய இருவருக்குமே அந்த பாடல்கள் பிடிக்கவில்லை. இதனால் எம்.எஸ்.வி கண்ணதாசனை தொலைபேசியில் தொடர்புகொண்டு படத்தின் சூழ்நிலையை சொல்ல, அவர் முதலில் மறுத்தாலும் அதன்பிறகு பாடலை தொலைபேசியிலேயே சொல்ல தொடங்கியுள்ளார்.
இந்த பல்லவியை கேட்ட எம்.ஜி.ஆர் அருமையாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு கண்ணதாசனை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அரசியலில் ஏற்பட்ட மோதல் இந்த ஒற்றை பாடலால் மீண்டும் ஒன்றினைந்தது. அந்த பாடல் தான் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற ‘’அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்’’ என்ற பாடல். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஒரு பாடல் மட்டுமல்லாமல் மேலும் 2 பாடல்களையும் கண்ணதாசன் இந்த படத்தில் எழுதியுள்ளார்.
கடைசியில் இந்த பாடலை எப்படி எழுதினீர்கள் என்று கேட்க, எம்.ஜி.ஆரின் ஆரம்பகால நெருங்கிய நண்பன் நான். அவர் எப்படி நடிப்பார், கை கால்களை எப்படி அசைப்பார் என்று எனக்கு தெரியும் அதை வைத்து தான் இந்த பாடலை எழுதினேன் என்று கூறியுள்ளார். இந்த பாடல் இன்றும் காலம் கடந்து நிலைத்திருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“