தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் இருவரும் நடிப்பில் வித்தியாசம் காட்டியிருந்தாலும், இருவரும் மாறி நடித்த இரு படங்களுமே தோல்வியை தழுவியுள்ளது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தவர் எம்.ஜி.ஆர். இன்றும் இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் இருந்து வரும் நிலையில் தனது படங்களில் மக்களுக்கு உதவுவது, ஆளும் வர்க்கதை எதிர்த்து குரல் கொடுப்பது, மக்கள் பிரச்சனைகளை தீர்க்க பாடுவதுவது என ஒரு ஜனரஞ்சகமான ஹீரோவாக வலம் வந்தவர். மேலும், தனது படங்களில் தான் புகை பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்காதவர் எம்.ஜி.ஆர்.
மறுப்பக்கம் சிவாஜி கணேசன், நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். வித்தியாசமான கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கும் சிவாஜி, நாடக நடிகராக இருந்து ஹீரோவாகவே தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த சிவாஜி சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். அதேபோல் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கும் சிவாஜி கணேசன் நடிப்பு பல்கலைகழகம் என்ற அழைக்கப்படுகிறார்.
இவர்கள் இருவரின் படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், விநியோகஸ்தர்கள், எம்.ஜி.ஆரிடம் சென்று, சிவாஜியை போல் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கலாமே என்று சொல்ல, அப்படி நடித்த படம் தான் பாசம். நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த இந்த படத்தில் எம்.ஜி.ஆர் க்ளைமேக்ஸில் இறந்துவிடுவார். இதனை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் பாசம் படம் தோல்வியை சந்தித்தது.
அதேபோல் சிவாஜியிடம் சென்ற விநியோகஸ்தர்கள் எம்.ஜி.ஆர் போல் ஜனரஞ்சகமாக நடியுங்கள் என்று சொல்ல, அதற்காக அவர் நடித்த படம் தான் தங்கச்சுரங்கம். இந்த படத்தில் சிவாஜி எம்.ஜி.ஆரை போலவே ஆக்ஷனில் அதகளம் செய்திருப்பார் சிவாஜி. ஆனால் இந்த படமும் தோல்வியை சந்தித்தது, இந்த இரு படங்களையும் இயக்கி தயாரித்தவர் டி.ஆர்,ராமண்ணா என்ற பழம்பெரும் இயக்குனர். இந்த தகவலை நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“