தேவர் எவ்வளவோ வற்புறுத்தியும், தாய் சொல்லை தட்ட விரும்பாத எம்.எஸ்.விஸ்வநாதன், எம்.ஜி.ஆர் படத்திற்கு இசையமைக்க மறுத்துள்ளார். இதற்கு காரணம் என்ன? அவர் கைவிட்டது எந்த படம் என்பதை பார்ப்போமா?
தமிழ் சினிமாவில் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்பட்டவர் எம்.எஸ்.விஸ்வநாதன். எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள அவர், நடிகராகவும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதேபோல் தொடக்கத்தில் பல இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணியாற்றிய எம்.எஸ்.வி, டி.கே.ராமமூர்த்தியுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
அதேபோல் எம்.ஜி.ஆர் நடிப்பில் பல ஹிட் படங்களை கொடுத்த சின்னப்ப தேவர், தான் தயாரித்த படங்களுக்கு இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனை பயன்படுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் எம்.எஸ்.வி ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இணைந்தபோது, அவரது இசையில் ஒரு படம் பண்ண வேண்டும் என்று விரும்பியுள்ளார். அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர் நடிப்பில் வேட்டைக்காரன் என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார்.
இந்த படத்திற்கு எம்.எஸ்.வி இசையமைக்க கேட்டபோது எம்.எஸ்.வி தாயார், தேவர் பிலிம்ஸில் கே.வி.மகாதேவன் இசையமைத்து வருகிறார். அதனால் அவர் இசையமைக்க வேண்டிய படத்திற்கு நீ இசையமைக்க கூடாது என்று கூறியுள்ளார். இதை கேட்ட எம்.எஸ்.வி வேட்டைக்காரன் படத்திற்கு இசையமைக்க மறுத்துள்ளார். அதன்பிறகு அந்த படத்திற்கு கே.வி.மகாதேவனே இசையமைத்துள்ளார்.
எம்.எஸ்.வி இசையமைப்பாளர் ஆகும் முன்பு, கோரஸ் பாடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரை அழைத்த கே.வி.மகாதேவன், நீ இங்கு இப்படியே இருந்தால் அனைவரும் உன்னை கோரஸ் விஸ்வநாதன் என்று சொல்வார்கள். அதனால் நீ சென்னைக்கு போய் இசையமைத்து முன்னேறும் வழியை பார் என்று சொல்லி, அவருக்கு பணம் மற்றும் துணி எடுத்து கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். இதன் காரணமாகத்தான் எம்.எஸ்.வி அம்மா கே.வி.மகாதேவன் இசையமைக்கும் கம்பெனிக்கு நீ இசைமைக்க கூடாது என்று எம்.எஸ்.வியிடம் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“