ஒரு விலை மாதுவின் நிலையில் இருந்து கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல், தாம்பத்திய உறவை பற்றிய புரிதலுடன் இருந்தாலும், அதை கேட்கும்போது ஒரு சாதாரண பாடலாக இருக்கும் வகையில் கண்ணதாசன் வடிவமைத்திருப்பார். இந்த பாடல் அப்போது பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அது என்ன பாடல்? என்ன படம் என்பதை பார்ப்போமா?
Advertisment
1973-ம் ஆண்டு இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான படம் அரங்கேற்றம். உலக நாயகன் கமல்ஹாசனின் அறிமுக திரைப்படமாக வெளியான இந்த படத்தில், பிரமிலா, சிவக்குமார், செந்தாமரை, உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். வி.குமார் இசையமைத்த இந்த படத்திற்கு அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தனது குடும்பத்தின் வறுமையை போக்க, பாலியல் தொழில் ஈடுபடும் நாயகி, தனது வாடிக்கையாளராக இருக்கும் ஒருவரே தனது தங்கையின் மாப்பிள்ளையாக வந்துவிட்டதால், தனது தொழிலை காரணம் காட்டி இந்த திருமணத்தை நிறுத்திவிடுவாரோ என்ற பதட்டத்தில் இருக்கும் நாயகிக்கு, மகிழ்ச்சியை கொடுக்கும் விதமாக, மாப்பிள்ளை திருமணத்தை நிறுத்தாமல், தாலி கட்டிவிடுவார். இதில் இவர்கள் இருவருக்கும் நலுங்கு வைக்கும்போது ஒரு பாடல் வரும்.
இந்த பாடல் தாம்பத்திய உறவை மையமாக வைத்து அமைய வேண்டும். ஆனால்,மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு இது ஒரு ஜாலி பாடலாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் கே.பாலச்சந்தர் கவியரசர் கண்ணதாசனிடம் கூறியுள்ளார். இதை உள்வாங்கிக்கொண்ட கண்ணதாசன், எழுதிய ஒரு பாடல் தான், ‘’மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா, என் மடியினில் உள்ள கதை அல்லவா’’ என்ற பாடல். இப்படி தொடங்கும் இந்த பாடலில் ஒவ்வொரு வரியும் தாம்பத்தியத்தின் ரசகியமாக இருக்கும்.
இந்த பாடலை இயக்குனர் கே.பாலச்சந்தர் கேட்டதுபோல் வெளியில், ஜாலி பாடலாக இருந்தாலும், அதன் அர்த்தத்தை கூர்ந்து கவனித்தால் தாம்பத்தியத்தின் அத்தனை அம்சங்களும் இந்த பாடலில் இடம் பெற்றிருக்கும். இந்த பாடலின் முடிவில், மாப்பிள்ளையும் பெண்ணின் அக்காவும் சந்தித்து தங்கள் பேசிக்கொண்டதை மறந்துவிடலாம் என்று பேசிக்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“