கவியரசர் கண்ணதாசன் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இடையே நெருங்கிய நட்பு இருந்தபோதிலும் பாடல்கள் காரணமாக இருவருக்கும் இடையே அவ்வப்போது செல்ல சண்டைகள் நடப்பது வழக்கம். அந்த மாதிரி நடந்த ஒரு சண்டை குறித்து இசையமைப்பாளர் எம்.எஸ்.வி ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்படும் கே.பாலச்சந்தர் இயக்கத்தில், கடந்த 1977-ம் ஆண்டு வெளியான படம் பட்டிண பிரவேசம். டெல்லி கணேஷ், ஜெய் கணேஷ், சிவச்சந்திரன், சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதியுள்ளார். இந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்த படத்திற்கான பாடல் கம்போசிங்கின்போது, ஒரு சுச்சிவேஷனுக்காக எம்.எஸ்.வி போட்டி டியூன் மிகவும் பிடித்து போக, இந்த டியூனை விடக்கூடாது. இதற்கே பாடல் எழுதி வாங்கிவிடு என்று இயக்குனர் கே.பாலச்சந்தர் எம்.எஸ்.வியிடம் கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து கவியரசர் கண்ணதாசன், கம்போசிங் அறைக்கு வருகிறார். அதற்கு முன்பே இந்த பாடலுக்கு எம்.எஸ்.வி சிறப்பாக டியூன் போட்டிருக்கிறார் என்று கண்ணதாசன் தெரிந்து கொண்டுள்ளார்.
வந்தவுடன் என்னடா இந்த பாட்டுக்கு சிறப்பா டியூன் போட்ருக்கியாமே எங்கே வாசி பாப்போம் என்று சொல்ல, எம்.எஸ்.வியும், தத்தகாரத்தில் நா நானா நானா நானா என்று டியூனை வாசித்துள்ளார். இதை கேட்ட கண்ணதாசன், இப்படி பாடினால் நான் வார்த்தைக்கு எங்கடா போறது என்று கேட்க கண்ணதாசன், இதற்கு பாட்டு எழுத முடியாது என்று கூறியுள்ளார். அப்போது எம்.எஸ்.வியை தனியாக அழைத்த கே.பாலச்சந்தர் டியூன் நல்லாருக்கு. கவிஞர் நீ சொன்னதான் கேட்பார் பாடல் எப்படியாவது வாங்கிவிடு என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு கண்ணதாசனை தனி அறைக்கு அழைத்து சென்ற எம்.எஸ்.வி என்ன கவிஞர் நீ இதுக்கு பாடல் எழுத முடியாதா? ஒரே சந்தத்தை வைத்து எத்தனை பாடல் போட்டிருக்கிறோம் இந்த டியூனுக்கு பாட்டு எழுத முடியாது என்று சொன்று சொல்கிறாயே நீ என்ன கவிஞர் என்று கேட்டுள்ளார். என்னடா இந்த பையன் ரொம்ப இன்சல்ட் பண்றானே என்று யோசித்த கண்ணதாசன், பாடல் எழுத தயாராகி வெளியில் வந்துள்ளார். என்ன பேச்சு பேசுற நீ, டியூனை வாசிடா என்று கண்ணதாசன் எம்.எஸ்.வியிடம் கூறியுள்ளார்.
இந்த முறை நானா நானாவுக்கு பதிலாக ல லாலா லாலா என்று எம்.எஸ்.வ மாற்றி பாட, சுதாரித்துக்கொண்ட கண்ணதாசன், எழுதிக்கடா என்று சொல்லிவிட்டு ‘’வா நிலா நிலா அல்ல, உன் வாலிபம் நிலா’’ என்று பாடியுள்ளார். இந்த பாடல் முழுவதும் லாலா லாலா என்று முடிவது போலவே வார்த்தைகளை அமைத்திருப்பார். பாடல் முடிந்தவுடன் கவிஞரே என்று எம்.எஸ்.வி அழைக்க, என்னடா என்று கண்ணதாசன் கேட்டுள்ளார்.
அப்போது இந்த ஃபாதர் இன் லா, மதர் இன் லா ஃபிரதர் இன் லா இதை விட்டுட்டீங்களே என்று எம்.எஸ்.வி விளையாட்டாக கேட்டுள்ளார். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.