தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த கவியரசர் கண்ணதாசன், ஒரு குடும்ப பாடலில் தனது குறும்புத்தனத்தை பதிவு செய்யும் வகையில் வரிகளை அமைத்திருப்பார் என்பது பலரும் கவனிக்காத ஒன்றாக இருக்கிறது,
Advertisment
எம்.ஜி.ஆர், சிவாஜி, தொடங்கி கமல்ஹாசன்ரஜினிகாந்த் வரை பல முன்னணி நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்த கவியரசர் கண்ணதாசன், நடிகர், கவிஞர், பாடல் ஆசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர். தனது மனதில் என்ன தோன்றுகிறதோ அதை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படுத்தும் குணம் கொண்டவர் என்பது பலரும் அறிந்த ஒரு தகவல்.
அதேபோல் தனது பாடல்களின் மூலம் மனிதனின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் உயிர்கொடுத்த கண்ணதாசன், சோகம், சந்தோஷம் என அனைத்திற்கும் பாடல்களை கொடுத்துள்ளார். இவரது பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் போற்றப்படும் பாடல்களாக காலம் கடந்தும் நிலைத்திருக்கிறது. எப்படிப்பட்ட பாடலாக இருந்தாலும் அதில் தனது குறும்புத்தனத்தை புகுத்த கண்ணதாசன் தவறியதே இல்லை.
அந்த வகையில் சிவாஜி நடிப்பில் வெளியான திரிசூலம் படத்தின் ஒரு பாடலில், தனது குறும்புத்தனத்தை புகுத்தியிருப்பார் கண்ணதாசன். 1979-ம் ஆண்டு, கே.விஜயன் இயக்கத்தில் வெளியான படம் திரிசூலம். சிவாஜி கணேசன் 3 வேடங்களில் நடித்திருந்த இந்த படம் கன்னடத்தில் வெளியான சங்கர் குரு என்ற படத்தின் ரீமேக்காக தமிழில் வெளியானது. படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கவியரசர் கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார்.
இந்த படத்தில் சிவாஜி கணேசனின் மனைவியான கே.ஆர்.விஜயா, கர்ப்பமாக இருக்கும் போது சிவாஜி பாடும் ஒரு பாடல் தான் ‘’மலர் கொடுத்தேன் கைகுலுங்க வளையலிட்டேன்’’ என்ற பாடல். கவியரசர் கண்ணதாசன் கணவர்கள் கலந்துகொண்ட ஒரு மாநாட்டில் ஒரு கவிதையை வாசித்திருப்பார். அந்த கவிதையில், மனைவிளங்க பிள்ளை ஒன்று வருவதென்றால், வயது 60 ஆகுங்கால் வரட்டும். ஆடவர்களே எழுந்து வாரீர். இனி சகியோம் பிள்ளைகளை எதிர்ப்போம் என்று முடித்திருப்பார்.
இந்த கவிதையை திரிசூலம் பாடலில் மாற்றி கூறியிருப்பார் என்பதை யாரும் கவனித்திருக்கமாட்டார்கள். மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையல் இட்டேன். மங்கை எந்தன் ராஜாத்திக்கு நானே, இது ஒரு சீராட்டம்மா என்னையும் தாலாட்டம்மா என்று எழுதியிருப்பார். இதில் பிள்ளை வந்துவிட்டால், அவனை கவனிப்பதிலேயே நேரம் எடுத்துக்கொள்ளாமல் என்னையும் கொஞ்சம் கவனித்துக்கொள் என்று ஏக்கம் குறும்பு என ஒரே வரியில் 2 அர்த்தத்துடன் கூறியிருப்பார்.
டி.எம்.சௌந்திரராஜன் பாடிய இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், திரிசூலம் படம் எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது யூடியூப் வீடியோவில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“