திரைத்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்திருந்த எம்.ஜி.ஆர் வித்தியாசமான கோணத்தில் நடித்திருந்த படம் எ்னறால், அது அன்பே வா திரைப்படம் தான். காதல் மற்றும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம், பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், இந்த படத்தில் முதலில் நாயகனாக நடிக்க இருந்தது எம்.ஜி.ஆர் அல்ல என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் பழமையான தயாரிப்பு நிறுவனம் என்று அழைக்கப்படும் ஏ.வி.எம். நிறுவனம் சார்பில், 1966-ம் ஆண்டு வெளியான படம் அன்பே வா. எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நாகேஷ், டி.ஆர்.ராமச்சந்திரன், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கியிருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வாலி எழுதியிருந்தார்.
ஏ.வி.எம் நிறுவனம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த முதல் படம், கலர் படம் என்ற அறிவிப்பு வெளியான உடனே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்துள்ளது. அதேபோல் எம்.ஜி.ஆர் தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி முழுக்க முழுகக் ஒரு காதல் படத்தில் நடித்தது இது தான் முதல் முறை. அதனால் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வரவேற்பை பெற வேண்டும் என்று ஏ.வி.எம் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிந்து சென்சாருக்கு செல்லும் முன் எம்.ஜி.ஆருக்கு படம் ஸ்பெஷல் காட்சியாக திரைபிடப்பட்டுள்ளது. படம் பார்த்து வெளியில் வந்த எம்.ஜி.ஆர் இது எனக்கான படம் இல்லை. எம்.எஸ்.விக்காக எடுக்கப்பட்ட படம். மியூசிக் ரொம்ப நல்லாருக்கு என்று கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் திரைப்பட பாணியில் இருந்து விலகி புதிய கதையசத்துடன் எடுக்கப்பட்ட அன்பே வா இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் போற்றப்படுகிறது.
அதே சமயம் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் எம்.ஜி.ஆர் அல்ல. இந்த படத்தை முதலில் சிறு பட்ஜெட் படமாக எடுக்க நினைத்து நடிகர் ஜெய்சங்கரிடம் கதையை சொல்ல, அவரும் நடிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தாதால், படத்தின் பட்ஜெட் பெரிதாகி, அவர் நினைத்தபடி எம்.ஜி.ஆர் நடிப்பில் இந்த படத்தை எடுத்துள்ளார். இது குறித்து ஜெய்சங்கரிடம் சொல்லிவிட்டு தான் இந்த மாற்றத்தை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“