ஜல்லிக்கட்டு படத்தின் 100-வது நாள் விழாவில் அனைவருக்கும் கேடயம் வழங்கிய எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு முத்தம் கொடுத்த நிலையில், அடுத்து வந்த நம்பியார் எனக்கும் முத்தம் கொடுங்கள் என்று அடம் பிடித்து வாங்கிக்கொண்டு திரும்பியுள்ளார்.
நாடக நடிகராக இருந்து சினிமாவில் அறிமுகமா நம்பியார், தமிழ் சினிமாவில் கொடூர வில்லன் நடிகர்களை பட்டியல் போட்டால் அதில் முதலிடத்தை பிடிப்பார். அந்த அளவிற்கு பல படங்களில் தனது வில்லத்தனத்தால் மிரட்டிய நம்பியார் முதன் முதலில் காமெடி நடிகராகத்தான் அறிமுகமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே நடித்து வெளியான படம் பக்த ராமதாஸ்.
1936-ம் ஆண்டு வெளியான இந்த படம் தான் எம்.எஸ்.நம்பியார் நடித்த முதல் படம். ஆனால் இந்த படத்திற்கு பிறகு அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், மீண்டும் நாடகத்திற்கே திரும்பிய நிலையில், 1946-ம் ஆண்டு வெளியான வித்யாபதி என்ற படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் நடிக்க வந்தார். இந்த படத்தில் காமெடி கேரக்டரில் நம்பியார் சிறப்பாக நடித்திருந்தார்.
துரதிஷ்டவசமாக வித்யாபதி படம் சரியாக போகாத காரணத்தினால், அந்த முடிவை கைவிட்டுள்ளார். அதன்பிறகு 1947-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் தனி நாயகனாக நடித்த முதல் படமாக ராஜகுமாரி படத்தில் நடித்தார். இந்த படம் அவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது. அதன்பிறகு பல வெற்றிப்படங்களில் நடித்திருந்த நம்பியார், சித்ரா லட்சுமணன் தயாரிப்பில், 1987-ம் ஆண்டு வெளியான ஜல்லிக்கட்டு படத்தில் நடித்திருந்தார்.
சத்யராஜ் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில், ராதா நாயகியாக நடித்திருந்த நிலையில், சிவாஜி கணேசன், நம்பியார். ஜனகராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு முன் சத்யராஜ் தான் நடித்த படங்களின் கெட்டப்பில் இந்த படத்தில் தோன்றி பல கொலைகளை செய்வார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது,
ஜல்லிக்கட்டு படத்தின் 100-வது நாள் விழாவில், கலந்துகொண்ட எம்.ஜி.ஆர், படக்குழுவினர் அனைவருக்கும் கேடயத்தை வழங்கினார். அப்போது சிவாஜிக்கு கேடயம் வழங்கிய எம்.ஜி.ஆர், அன்பின் அடையாளமாக அவருக்கு முத்தம் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து கேடயம் வாங்க வந்த நம்பியார், எனக்கும் முத்தம் வேண்டும் என்று கேட்க எம்.ஜி.ஆர் மறுத்து தனது இருக்கையில் அமர்ந்துவிட்டார்.
அதே சமயம் முத்தம் கொடுத்தால் தான் நான் செல்வேன் என்று அடம் பிடித்த நம்பியார், இறுதியாக எம்.ஜி.ஆரிடம் முத்தம் வாங்கிக்கொண்டு தான் அங்கிருந்து நகர்ந்துள்ளார். நம்பியார் முத்தம் கேட்கும்போது சிவாஜி அவரை செல்லமாக முதுகில் அடித்துக்கொண்டிருக்கும் வீடியோ காட்சிகள் இப்போதும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.