தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவரது படங்களில் பாடல்கள் எழுத வாய்ப்பு கிடைக்காதா என்று கவிஞர்கள் ஏங்கிக்கொண்டிருந்தபோது, எம்.ஜி.ஆரே அழைத்து வாய்ப்பு கொடுத்தும் அதனை ஏற்ற கவிஞர் ஒருவர் மறுத்துள்ளார்.
எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1966-ம் ஆண்டு வெளியான படம் கலங்கரை விளக்கம். சரோஜா தேவி, நம்பியார், நாகேஷ் மனோராமா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படத்திற்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கே.சங்கர் படத்தை இயக்கியிருந்தார். பொதுவாக எம்.ஜி.ஆருக்கு இசையில் ஆர்வம் அதிகம் என்பதால், அவர் படங்களில் பாடல்கள் பதிவானதும் எம்.ஜி.ஆருக்கு போட்டு காட்டுவதை அனைத்து தயாரிப்பாளர்களும் வழக்கமான வைத்திருந்தனர்.
அந்த வகையில், கலங்கரை விளக்கம் படத்தின் படப்பிடிப்பு நடந்த காலக்கட்டத்தில் கண்ணதாசனுடன் மோதலில் இருந்த எம்.ஜி.ஆர் தனது படங்களுக்கு இனி வாலி தான் பாடல் எழுதுவார் என்ற அறிவித்திருந்தார். அதே சமயம் கலங்கரை விளக்கம் படத்தில் பஞ்சு அருணாச்சலம் 2 பாடல்களை எழுதியிருந்தார். இந்த இரண்டு பாடல்களும் பதிவு செய்யப்பட்டபிறகு படத்தின் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி எம்.ஜி.ஆருக்கு பாடலை போட்டு காட்டியுள்ளார். பாடலை கேட்ட எம்.ஜி.ஆர் மீண்டும் ஒருமுறை போடுங்கள் என்று கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர் 2-வது முறை கேட்பதால் பாடல் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று யோசித்த ஜி.என்.வேலுமணி மீண்டும் பாடலை போட, 3-வது முறையாக மீண்டும் பாடலை போடுமாறு எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். 3-வது முறையாக பாடலை கேட்ட அவர், இதை யார் எழுதியது என்று கேட்க, பஞ்சு அருணாச்சலம் என்று கூறியுள்ளார். இல்லை. இதை எழுதியது கண்ணதாசன், அவர் எழுத்துக்கள் எனக்கு தெரியும். இந்த பாடலை விட்டு விட்டு வேறு கவிஞரை வைத்து பாடலை எழுதுங்கள் என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட ஜி.என்.வேலுமணி எம்.ஜி.ஆரிடம் எடுத்து சொல்லிலும் அவர் அதை நம்ப மறுத்துள்ளார். இதனால் ஸ்டூடியோவுக்கு திரும்பிய வேலுமணி, எம்.எஸ்.விஸ்வநாதனிடம் இதை சொல்ல, ஒரு சந்தர்ப்பத்தில் எம்.ஜி.ஆரை சந்தித்த எம்.எஸ்.வி, பாடலை எழுதியது பஞ்சு அருணாச்சலம் தான். ஒன்று அவர் எழுதி வைத்திருந்தார். அதற்கு நான் டியூன் போட்டேன். மற்றொன்று நான் போட்ட டியூனுக்கு அவர் பாடல் எழுதினார் என்று சொல்ல, பஞ்சு அருணாச்சலம் கண்ணதாசன் போலவே நன்றாக பாடல் எழுதுகிறார். தொடர்ந்து நமது படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து ஜி.என் வேலுமணியை அழைத்து பஞ்சு அருணாச்சலத்தை என்னை வந்து பார்க்க சொல் என்று கூறியுள்ளார். அதன்பிறகு ஜி.என்.வேலுமணி இதை பஞ்சு அருணாச்சலத்திடம் சொல்ல, அவரோ எம்.ஜி.ஆரை சந்திப்பதை தவிர்த்துள்ளார். கவியரசர் கண்ணதாசனின் அண்ணன் மகனான பஞ்சு அருணாச்சலம், கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்தவர். இப்போது கண்ணதாசன் எம்.ஜி.ஆர் மோதல் இருக்கும்போது நாம் போய் பார்த்து பாடல் எழுதினால் சரியாக இருக்காது என்று நினைத்து பஞ்சு அருணாச்சலம் எம்.ஜி.ஆரை சந்திப்பதை தவிர்த்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil