எம்.ஜி.ஆருடன் பல படங்களில் இணைந்து நடித்திருந்த சரோஜா தேவி பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும், படப்பிடிப்பு தளத்திற்கு எம்.ஜி.ஆர் வந்தபோது அவரை மதிக்காமல் இருந்துள்ளார் சரோஜா தேவி என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
கர்நாடகாவில் பிறந்த சரோஜா தேவி, 1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். நடிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை என்றாலும் தனது அம்மாவுக்காக ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்ட சரோஜா தேவி, மகாகவி காளிதாஸ் படத்தில் நடித்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால், அடுத்து ஒரு படத்தில் மட்டும் நடித்துவிடு என்று அவரது அம்மா கூறியுள்ளார்.
அவரின் வார்த்தையை ஏற்றுக்கொண்டு அடுத்து ஒரு படத்தில் நடித்த சரோஜா தேவி, மீண்டும் பெங்களூர் சென்று தனது பள்ளி படிப்பை தொடர முடிவு செய்துள்ளார். அந்த நேரத்தில், தமிழ் இயக்குனரான கே.சுப்பிரமண்யம், தான் கன்னடத்தில் இயக்க உள்ள கட்ச தேவயானி என்ற படத்தில் சரோஜா தேவி நடிக்க வேண்டும் என்று விருப்பப்பட, அம்மாவின் வற்புறுத்தலால் மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய சரோஜா தேவி அந்த படத்தில் நடித்திருந்தார்.
இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து சரோஜா தேவிக்கு பட வாய்ப்பும் குவிய தொடங்கியது. இதனிடையே சரோஜா தேவி நடிப்பில் கட்ச தேவயானி என்ற படத்தை இயக்கிய இயக்குனர் கே.சுப்பிரமணியம் எம்.ஜி.ஆரின் குருவாக இருந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது ஒருமுறை எம்.ஜி.ஆர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரை அனைவரும் வரவேற்றுள்ளனர்.
படப்பிடிப்பு தளத்தில் இருந்த பலரும் அவரது காலில் விழுந்து வணங்கிய நிலையில், படத்தில் நாயகியாக நடித்த சரோஜா தேவி எதையும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இதனையடுத்து கே.சுப்பிரமணியத்தை சந்தித்த எம்.ஜி.ஆர் இவர் யார் என்று கேட்க, அவர் சரோஜா தேவி, இந்த படத்தின் நாயகிய என்று கூறியுள்ளார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் அங்கிருந்து கிளம்ப, அவருக்கு வரவேற்பு அளித்த அனைவரும் அதே மாதிரி வழி அனுப்பி வைத்துள்ளனர்.
எம்.ஜி.ஆர் அங்கிருந்து சென்றவுடன் அவர் யார் என்று சரோஜா தேவி செட்டில் இருந்தவர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர் தான் எம்.ஜி.ஆர் என்று சொல்ல, தனது தவறை உணர்ந்த சரோஜா தேவி, இவ்வளவு பெரிய நடிகர் வந்திருக்கிறார் அவருக்கு ஒரு வணக்கம் கூட சொல்லவில்லையே என்று அன்று முழுவதும் வருத்தப்பட்டுள்ளார் சரோஜாதேவி. அதே சமயம் அன்று அவரை பார்த்த எம்.ஜி.ஆர் அடுத்து தனது திருடாதே படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“