ஸ்டூடியோவுக்குள் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவை மண் மணம் வீச கிராமத்து வாழ்வியல் பக்கம் எழுத்துச்சென்றவர் இயக்குனர் பாரதிராஜா. 1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய பாரதிராஜாவுக்கு முதன் படமே பெரிய அறிமுகத்தை கொடுத்தது. சப்பாணியான கமல், மயிலாக ஸ்ரீதேவி, பரட்டையாக ரஜினிகாந்த் ஆகியோர் கிராமத்து மனிதர்களாகவே வாழ்ந்திருப்பார்கள்.
இதில் கமல்ஹாசன் பேச்சு நடை, ஸ்ரீதேவியின் நடிப்பு, ரஜினிகாந்தின் இது எப்படி இருக்கு என்ற வசனம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இளையராஜா இசையமைத்திருந்த இந்த படத்திற்கு கங்கை அமரன், கண்ணதாசன் ஆகியோர் எழுதிய பாடல்கள் பெரிய ஹிட்டடித்தது. 16 வயதினிலே படத்திற்காக நடிகை ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்காக தேசிய விருது கிடைத்தது.
தமிழில் க்ளாசிக் ஹிட்டாக அமைந்த 16 வயதினிலே திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. ஸ்ரீதேவி மோகன்பாபு ஆகியோர் நடித்திருந்த இந்த படம் அங்கேயும் வெற்றி பெற்றதை தொடர்ந்து படம் இந்தியில் சொல்வா சவான் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தில், அமோல் பலேக்கர் நாயகனாக நடித்த நிலையில், ஸ்ரீதேவி இந்த படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார். வெற்றிப்படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் இருந்தாலும், 16 வயதினிலே இந்தி ரீமேக் படுதோல்வியை சந்தித்தது.
தமிழ் தெலுங்கில் வெற்றி பெற்ற இந்த படம் இந்தியில் ஏன் வெற்றியை பெறவில்லை என்பது இயக்குனர் பாரதிராஜாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தினாலும் அவருக்கு பல வருடங்களுக்கு பிறகு உண்மை தெரியவந்துள்ளது. இதில் உண்மை என்னவென்றால் சொல்வா சவான் படம் இந்தியில் எடுக்கப்பட்டது அல்ல என்றும், அது ஒலு பேஜ்பூரி மொழியில் எடுக்கப்பட்ட படம் என்றும் தெரியவந்துள்ளது.
படத்திற்கு கதை திரைக்கதை பாரதிராஜா எழுதி இருந்தாலும், வசனம் டாக்டர் சங்கர் கேஷ் என்பவர் எழுதியிருந்தார். ஆனால் அவர் எழுதியது இந்தி மொழி அல்ல என்றும், பீகார் மற்றும் நேபாள எல்லையில் பேசப்படும் பேஜ்பூரி மொழியில் எழுதியிருந்தாதால், அந்த படம் இந்திப்படமாக இல்லாமல் ஒரு பேஜ்பூரி படமாக மக்கள் மத்தியில் பதிந்துவிட்டது. படத்தின் தோல்விக்கு வசனம் தான் காரணம் என்பது பல வருடங்களுக்கு பிறகே பாரதிராஜாவுக்கு தெரியவந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“