நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தமிழ் சினிமாவின் நடிப்பு பல்கலைகழகம் என்று அழைக்கப்பட்டாலும், சக நடிகர்களின் நடிப்பை அவர் பாராட்ட தவறியதே இல்லை. அந்த வகையில் நாடகத்தில் ஒரு கதாசிரியரின் நடிப்பை பார்த்து வியந்து அவருக்கு விருந்தே வைத்துள்ளார்.
நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவில், 1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் அறிமுகமான சிவாஜி கணேசன் தனது நடிப்புத்திறமையின் மூலம் பல ஹிட் படங்களை கொடுத்து தனது வாழ்நாளின் இறுதிவரை படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர். சினிமாவில் நடிகராக இருந்தபோது நாடகங்களிலும் நடித்து வந்தவர் தான் சிவாஜி.
அதேபோல் ஹிட்டாக நடந்துகொண்டிருக்கும் நாடகங்களை பார்க்கவும் சென்றுவருவதை வழக்கமாக வைத்துள்ளார் சிவாஜி. அந்த வகையில் ஒருமுறை சித்ராலையா கோபு எழுதி நடித்த ஒரு நாடகத்தை பார்க்க சென்றுள்ளார். ஒரு பாட்டு வாத்தியார், இளமையாக இருக்கும் வகையில் ஒரு மருந்தை கண்டுபிடிக்கிறார். அந்த மருந்தை அவரது மனைவி தவறுதலாக தண்ணீரில் கலந்துவிடுகிறார். இந்த தண்ணீரை குடித்த அனைவரு்ம இளமையாக மாறிவிடுகின்றனர்.
அதேபோல் தண்ணீர் குடித்து இளைஞராக மாறிய அந்த பாட்டு வாத்தியார் கர்நாடக சங்கீதத்தை விட்டுவிட்டு, மாடல் பாடல்களை பாடி அசத்தி வருவார். இந்த பாட்டு வாத்தியார் கேரக்டரில் நடித்தவர் சித்ராலையா கோபு. இவரின் நடிப்பை பார்த்து அசந்துபோன சிவாஜி கணேசன், நாடகம் முடிந்தவுடன், தனது டிரைவரை விட்டு, இந்த நாடகத்தில் நடித்த சித்ராலையா கோபு மற்றும் இயக்கிய கோபி ஆகிய இருவரையும் தனது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
அதன்படி மறுநாள் அவரது வீட்டுக்கு சென்ற சித்ராலையா கோபு மற்றும் இயக்குனர் கோபி இருவருக்கும் தனது வீட்டில் விருந்து வைத்து அசத்தியுள்ளார் சிவாஜி. மேலும் நீ நன்றாக கதை எழுதுவாய் என்று தெரியும். அதிலும் காமெடி கதைகள் உனக்கு கை வந்த கலை. ஆனால் இவ்வளவு அழகாக காமெடியில் நடிப்பை வெளிப்படுத்துவாய் என்று நான் நினைக்கவே இல்லை என்று சிவாஜி மனம் திறந்து சித்ராலையா கோபுவை பாராட்டியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“