க்ளாசிக் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ஒரு படத்திற்கு ஒரு பாடலுக்கான 40 கவிஞர்கள் எழுதிய நிலையில், அந்த ஒற்றை பாடலை பாடுவதற்காக பாடகர் டி.எம். சௌந்திர்ராஜன் எம்.ஜி.ஆருக்கு வைத்த செக் சினிமாவில் பலரும் அறியாத தகவலாக உள்ளது.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பெற்றிருந்தவர் எம்.ஜி.ஆர். நாடக நடிகராக இருந்து 1935-ம் ஆண்டு வெளியான சதி லீலாவதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி 10 வருட போராட்டத்திற்கு பிறகு சினிமாவில் ஹீரோவான இவர், அதன்பிறகும் பல தடைகளை சந்தித்துள்ளார். ஆனாலும் அடுத்தடுத்து அவர் கொடுத்த வெற்றிப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.
பின்னாளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், திரைத்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவருமான எம்.ஜி.ஆர், நடிப்பில் 1969-ம் ஆண்டு வெளியான படம் அடிமைப்பெண். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இருவருமே 2 வேடங்களில் நடித்திருந்த இந்த படத்திற்கு, கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். அந்த காலக்கட்டத்திலேயே 50 லட்சம் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தை, இயக்குனர் கே.சங்கர் இயக்கியிருந்தார்.
இந்த படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம் பெற்றிருந்தது. இதில் ஆயிரம் நிலவே வா என்ற பாடலை பாட டி.எம்.சௌந்திரராஜனை கேட்டுள்ளார். எம்.ஜி.ஆர். ஆனால் அப்போது தனது மகன் திருமணத்திற்காக மதுரைக்கு செல்ல வேண்டி இருப்பதால் தன்னால் பாட முடியாது என்று சொன்ன டி.எம்.எஸ் திருமணம் முடிந்து வந்து பாடுகிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனாலும் அதுவரை பொறுக்காத எம்.ஜி.ஆர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனை வைத்து அந்த பாடலை பதிவு செய்துள்ளார்.
எஸ்.பி.பி குரலில் பாடல் சூப்பராக வந்துள்ளது என்று படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருந்துள்ளனர். இதனிடையே அடிமையாக இருக்கும் தனது தாயை சந்திக்க சென்று திரும்பும் எம்.ஜி.ஆர் மகிழ்ச்சியாக பாடக்கூடிய ஒரு பாடல் எழுத வேண்டும். இந்த பாடலை எழுத பல கவிர்ஞகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் அவர்களின் பாடல்கள் எம்.ஜி.ஈரை பெரிதாக கவரவில்லை. இதனால் அடுத்தடுத்து கவிஞர்களை மாற்றிக்கொண்டே இருந்துள்ளார்.
இப்படியே 40 கவிஞர்கள் பாடல்கள் எழுதியபோதும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லாத நிலையில், கடைசியாக ஆலங்குடி சோமு பாடல் எழுதுகிறார். இந்த பாடல் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. படக்குழுவினருக்கும் பாடல் மிகவும் பிடித்துவிட, ஆயிரம் நிலவே வா பாடல் போன்று எஸ்.பி.பி வைத்து இந்த பாடலை பதிவு செய்துள்ளனர். அப்போது எஸ்.பி.பி-யின் இளமையான குரல் அந்த பாடலுக்கு உயிர்கொடுக்கவில்லை என்று எம்.ஜி.ஆர் நினைத்துள்ளார்.
மேலும் படக்குழுவினருக்கும் இந்த பாடல் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. இதனால் அடுத்த வாய்ப்பை தேடிய எம்.ஜி.ஆர் உடனடியாக டி.எம்.எஸ்.க்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அவர், இனிமேல் தனக்கு சம்பளமாக ரூ1000 தர வேண்டும் என்று எம்.ஜி.ஆருக்கு செக் வைத்துள்ளார். ஆனாலும் பாடல் நன்றாக வர வேண்டும் என்று நினைத்த எம்.ஜி.ஆர் அதற்கும் சம்மதித்ததை தொடர்ந்து பாடல் பதிவு நடைபெறுகிறது.
டி.எம்.எஸ். பாடிய அந்த பாடல் எம்.ஜி.ஆர் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. அந்த பாடல் தான் தாயில்லாமல் நானில்லை என்ற பாடல். இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த பாடல், எம்.ஜி.ஆர் தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் அவரது பிறந்த நாள்களில் ஒலிக்கப்படும் முக்கிய பாடலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“