சினிமா பாடல்கள் மூலம் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்ட முக்கிய கவிஞர் கண்ணதாசன். ஒரு பாடல் எழுத வேண்டும் என்றால் அது சாதாரணமாக இல்லாமல் தன் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை வைத்து பாடல் எழுதம் கண்ணதாசன், கண்ணதாசன், இயக்குனர் தயாரிப்பாளர், கதாசிரியர், உள்ளிட்ட பல திறமைகளை உள்ளடக்கி இருந்தார்.
அதேபோல் மனித வாழ்க்கையின் அத்தனை உணர்ச்சிகளையும் பாடலாக வெளிப்படுத்தியுள்ள கண்ணதாசனின் வரிகள் விரக்தியில் உள்ள அனைவருக்கும் ஆறுதலாகவும், மகிழ்ச்சியில் உள்ள பலருக்கும் மேலும் மகிழ்ச்சியை தரக்கூடியதாகவும் உள்ளது. கண்ணதாசனின் பாடல் வரிகளுக்காக கையில் மாற்றங்கள் செய்வதும், கேரக்டர்களின் பெயர்களை மாற்றுவதும் நடந்துள்ளது.
அதேபோல் படத்தில் பாடல் வரும் சூழ்நிலையை சொல்லிவிட்டால், அதை பற்றி யோசிக்கும்போதே ஒரு உண்மை சம்பத்தையும் கலந்து பாடல்கள் எழுதக்கூடிய கண்ணதாசன், சாண்டொ எம்.எம்.சின்னப்பதேவர் விரக்தியில் புலம்பியதை ஒரு பாடலாக எழுதி ஹிட் கொடுத்தவர் என்பது பலரும் அறியாத ஒரு உண்மை. க்ளாசிக் தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பாளராக திகழ்ந்தவர் தான் சாண்டோ எம்.எம்.சின்னப்பதேவர்.
தனது தேவர் பிலிம்ஸ் மூலம் பல படங்களை தயாரித்துள்ள அவர், எம்.ஜி.ஆர் நடிப்பில் அதிக படங்களை தயாரித்த தயாரிப்பாளர் என்ற பெருமை பெற்றவர். அந்த வகையில், கடந்த 1972-ம் ஆண்டு மருதமலை முருகன் கோவில் பணிகளை முடிப்பதற்காக, ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்த சின்னப்ப தேவர் முருகனின் ஆறுபடை வீடுகளை மையப்படுத்தி ஒரு கதையை தயார் செய்துள்ளார்.
முருகனின் ஆறுபடை வீடுகளிலும் நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பாடல் எழுதப்பட்டது. குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் படத்தின் அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். ஒவ்வொரு படை வீட்டுக்கும் ஒரு பாடல் எழுதிய கண்ணதாசன் பழனிக்கு பாடல் எழுதும்போது சின்னப்ப தேவரின் புலம்பலை பாடலாக எழுதியுள்ளார்.
பொதுவாக முருக பக்தரான சின்னப்ப தேவர், வேண்டுதல் வைக்கும்போது தனது நண்பனிடம் பேசுவது போன்று பேசுவார் என்பதை அறிந்திருந்த கண்ணதாசன், அவரது புலம்பலை வைத்து எழுதிய பாடல் தான் ‘’வருவாண்டி தருவாண்டி மலையாண்டி என்ற பாடல். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவற்பை பெற்றிருந்த நிலையில், தற்போதைய காலக்கட்டத்திலும் முருகனின் முக்கிய பாடல்களில் ஒன்றாக உள்ளது.
சிவக்குமார், ஜெமினி கணேசன், ஏவிஎம் ராஜன், மேஜர்சுந்தர் ராஜன், கே.ஆர்.விஜயா, ஆர்.எஸ்.மனோகர் என பல நடிகர்கள் நடித்திருந்த இந்த படம் நவம்பர் 1972-ல் வெளியாகி பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்த படத்தின் மூலம் கிடைத்த பணத்தை மருதமலை கோவில் திருப்பணிக்காக சின்னப்பதேவர் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“