கேரக்டர் நடிகராக தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கிய பின்னாளில் சினிமாவையே தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தவர் எம்.ஜி.ஆர். சினிமாவில் கிடைத்த வேடங்களில் நடித்து வந்த இவர், அறிமுகமாகி 10 ஆண்டுகள் கழித்தே நாயகனாக நடிக்க தொடங்கினார். அதிலும் இவர் நாயகனாக நடிக்கும்போது நடிகைகள் பலரும் இவருடன் இணைந்து நடிக்க முடியாது என்று அவமானப்படுத்திய சம்பங்களும் நடந்துள்ளது.
பசி, வறுமை, அவமானம் என அனைத்து இன்னல்களையும் கடந்து வந்த எம்.ஜி.ஆர் பின்னாளில் தனது தனித்துவமாக திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் தனது ஆளுமையை செலுத்தினார். அவருக்கு மக்கள் ஆதரவு பெருகியதை தொடர்ந்து அவர் நடிக்கும் படங்களும் வெற்றிகளை குவிக்க தொடங்கியது. இதன் காரணமாக 50 கள் தொடங்கி 70-களின் இறுதிவரை தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து சாதித்தவர் எம்.ஜி.ஆர்.
ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமையுடன் இருந்த எம்.ஜி.ஆர் தான் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பை 18 நாட்களில் முடித்து வெளியிட்டு 100 நாட்கள் ஓட வைத்த பெருமைக்கு சொந்தக்காரர். 1966-ம் ஆண்டு தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான படம் முகராசி. எம்.ஏ.திருமுகம் இயக்கிய இந்த படத்தில் எம்.ஜி.ஆர், நம்பியார், ஜெயலலிதா, ஜெயந்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
மேலும் இந்த படத்தில் ஜெமினி கணேசன்’ முதல்முறையாக எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்திருந்தார். கே.வி.மகாதேவன் இசையமைத்த இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருந்தார். சினிமா அரசியல் என உச்சத்தில் இருந்த எம்.ஜி.ஆர், இந்த படத்தின் படப்பிடிப்பை குறுகிய காலத்தில் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்துள்ளார்.
அதன்படி முகராசி படத்தின் முழு படப்பிடிப்பையும் 18 நாட்களில் முடித்த எம்.ஜி.ஆர் படத்தை 100 நாட்கள் ஓட வைத்தார். அந்த வருடத்தில் வெளியான வெற்றிப்படங்களில் முகராசியும் ஒன்று. அதேபோல் சின்னப்ப தேவர் – எம்.ஜி.ஆர் கூட்டணியில் வெளியான வெற்றிப்படங்களில் ஒன்றாகவும் இணைந்தது. சிறுவயது நண்பர்களாக எம்.ஜி.ஆர் சின்னப்பதேவர் இருவரும் இணைந்து 16 படங்களில் பணியாற்றியுள்ளனர். இதில் பெரும்பாலான படங்கள் வெற்றியை பெற்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“