தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முறை திறமை கொண்டவர் எம்.ஜி.ஆர். நாடக நடிகராக இருந்து பலகட்ட முயற்சிக்கு பின் சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர், சினிமாவிற்கு வநது 10 வருடங்களுக்கு பிறகுதான் நாயகனாக நடிக்க தொடங்கினார். இவருடன் நடிக்க முடியாது என்று நாயகிகள் வெளிப்படையாக சொன்ன காலம் போய் எம்.ஜி.ஆருடன் ஒரு காட்சியில் நடித்துவிடமாட்டோமா என்று பலரையும் ஏங்க வைத்தவர் தான் எம்.ஜி.ஆர்.
சினிமாவில் படிப்படியாக உச்சம் தொட்ட எம்.ஜி.ஆர் பிறகு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் என ஒரு சில மெகாஹிட் படங்களை இயக்கியுள்ளார். சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் கால் பதித்த எம்.ஜி.ஆர் தமிழகத்தில் தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்த பெருமைக்கு சொந்தக்காரர். சினிமாவின் மூலம் மக்ளுக்கு தேவையான பல நல்ல கருத்துக்களை எடுத்து சொன்ன எம்.ஜி.ஆர் தான் முதல்வராக இருந்தபோது பல நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
சினிமா அரசியல் என இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய எம்.ஜி.ஆர், ஒரு படத்தை பார்க்க டிக்கெட் கிடைக்காமல் தவித்த சம்பவம் கூட நடந்துள்ளது. 1951-ம் ஆண்டு டி.ஆர்.சுந்தரம் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான படம் சர்வாதிகாரி. இந்த படத்தின் ஷூட்டிங் சேலத்தில் நடந்து கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் எழுத்தாளர் ரா.வெங்கடசாமி.
ஒருநாள் எம்.ஜி.ஆர் வெங்கடசாமி இருவரும் இரவு சாப்பிட்டு முடித்துவிட்டு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எம்.ஜி.ஆர் இந்த படத்திற்கு போக வேண்டும் டிக்கெட் வாங்கி கொடுங்க என்று கேட்டுள்ளார். எம்.ஜி.ஆர் எதற்காக இந்த படத்திற்கு போக நினைக்கிறார் என்பதை புரிந்துகொண்ட வெங்கடசாமி, தனது நெருங்கிய நண்பரின் திரையரங்கான ஓரியண்ட் திரையரகை தொடர்புகொண்டு டிக்கெட் கேட்டுள்ளார். ஆனால் அவரின் துரதிஷ்டம் அன்று அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்த்துவிட்டது.
எப்படியாவது 2 டிக்கெட்டுகள் வேண்டும் என்று வெங்கடசாமி கேட்டபோது நண்பரின் பேச்சை தட்டாத அந்த திரையரங்கு உரிமையாளர் உள்ளே 2 சேர் போட சொல்கிறேன். இதில் படம் பார்க்கிறீர்களா என்று கேட்டுள்ளார். இதை எம்.ஜி.ஆரிடம் சொன்னபோது அவர் உடனடியாக ஒப்புக்கொண்டு உடனாடியாக அங்கே கிளம்பிவிட்டார் எம்.ஜி.ஆர். அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர் ஆர்வத்துடன் பார்த்த படத்தில் நாயகியாக நடித்தவர் வி.என்.ஜானகி.
அந்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர் ஜானகியை காதலித்துக்கொண்டிருந்த நிலையில், இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. இதனால் காதலியின் படம் வெளியானபோது காதலனான எம்.ஜி.ஆர் அந்த படத்தை பார்க்க டிக்கெட் கிடைக்காமல் தவித்துள்ளார். இறுதியாக தியேட்டரில் எக்ஸ்ரா சேர் போட்டு அந்த படத்தை பார்த்துள்ளார். சர்வாதிகாரி படப்பிடிப்பு நடந்த சமயத்தில் வி.என்.ஜானகி நடிப்பில் தேவகி என்ற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.