சினிமா உலகில் இரு பெரிய ஹீரோக்கள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பதும் அவர்களுக்கு சமமான முக்கியத்துவம் இருப்பதும் இன்றைய சினிமாவில் சாத்தியமில்லை. அப்படியே இணைந்து நடித்தாலும் ஒருவர் வில்லனாகவும் ஒருவர் ஹீரோவாகவும் நடிப்பது தான் இப்போதைய ட்ரெண்டு. அதே சமயம் முன்னணி ஹீரோக்கள் யாரும் இது போன்ற டபுள் ஹீரோ படத்திற்கு பெரிதும் ஒப்புக்கொள்வதில்லை.
அதேபோல் தான் க்ளாசிக் சினிமாவில் தங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்த ஜாம்பவான் நடிகர்கள் எம்.ஜி.ஆர் சிவாஜி. இவர்கள் இருவரும் தனித்தனியாக பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும், இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தது ஒரு படம் தான். டிஆர் ராமன்னா இயக்கத்தில், டிஆர் ராஜகுமாரி தயாரித்த இந்த படத்தின் பெயர் கூண்டுக்கிளி.
1954-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் எம்.ஜி.ஆர் நாயகனாகவும், சிவாஜி நெகடீவ் கலந்த கேரக்டரிலும் நடித்திருந்தனர். இந்த படத்தில் நாயகியாக பிஎஸ் சரோஜா நடித்திருந்தார். பி.எஸ்.சரோஜாவை பெண் பார்க்க செல்லும் சிவாஜி, திருமணத்திற்கு ரெடியாகி இருப்பார். சரோஜாவின் வீட்டாரும் சிவாஜிக்கு பெண் கொடுக்க சம்மதித்துவிடுவார்கள். ஆனால் இந்த திருமண விஷயம் சரோஜாவுக்கு தெரியாது.
இதனிடையே கடன் பிரச்சனை காரணமாக இந்த திருமணம் நின்றுவிடும் இதனால் விரக்தியடைந்த சிவாஜி தற்கொலை செய்துகொள்வதற்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருப்பார். அப்போது அங்கு வரும் எம்.ஜி.ஆர் சிவாஜியை காப்பாற்றி தனது வீட்டுக்கு அழைத்து செல்வார். அப்போது அங்கு எம்.ஜி.ஆர் மனைவியாக இருப்பது பி.எஸ்.சரோஜா. அவரை பார்த்து சிவாஜி அதிர்ச்சியாகிறார்.
ஆனால் தன்னை பெண் பார்க்க வந்தவர் தான் சிவாஜி என்று தெரியா பி.எஸ்.சரோஜா அவரை அண்ணா என்று அழைக்க, சிவாஜியோ அவரை மனைவியாக்க காதலி என்ற நினைப்பில் இருக்கிறார். ஒரு கட்டத்தில் கொலை குற்றம் சாட்டப்பட்டு எம்.ஜி.ஆர் சிறை சென்றுவிடுகிறார். அப்போது அவரின் மனைவியான பி.எஸ் சரோஜாவை தன் வழிக்கு கொண்டு வர சிவாஜி முயற்சிக்கிறார். இதை மறுக்கும் சரோஜா ஒரு கட்டத்தில் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஆனாலும் சிவாஜியின் தொல்லை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த வேளையில் சிறையில் இருந்து வெளியே வரும் எம்.ஜி.ஆருக்கு சிவாஜி தனது மனைவிக்கு தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதை அறிந்து அவரை தேடி போகிறார். அந்த வேளையில் சரோஜா தன்னை ஏற்றுக்கொள்ளாத விரக்தியில் சிவாஜி மீண்டும் தற்கொலை செய்துகொள்ள தண்டவாளத்தில் படுத்திருப்பார்.
மீண்டும் அவரை காப்பாற்றும் எம்.ஜி.ஆர் தனது மனைவிக்கு தொல்லை கொடுத்தது ஏன் என்று கேள்வி எழுப்ப, இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. அப்போது சிவாஜியை ஒரு தலையாக காதலிக்கும் சொக்கி வந்து எம்.ஜி.ஆர் மனைவிதான் சிவாஜி முதலில் பார்த்த பெண் என்ற உண்மையை சொல்ல எம்.ஜி.ஆர் அதிர்ச்சியாகிறார். இந்த வேளையில் சிவாஜியும் தனது தவறை உணர்ந்து திருந்தி சொக்கியை திருமணம் செய்துகொள்கிறார். அத்துடன் படம் முடிகிறது.
இந்த படம் வெளியானபோது எம்.ஜி.ஆர் சிவாஜி ரசிகர்கள் திரையரங்குகளில் மோதலில் ஈடுபட்டதாகவும், இதன் காரணமாக படம் ஒரே நாளில் அனைத்து திரையரங்குகளில் இருந்தும் தூக்கப்பட்டதாவும் கூறபப்டுகிறது. இந்த படத்தில் முதல் அரைமணி நேரம் மட்டுமே எம்.ஜி.ஆர் வருவார். அதன்பிறகு அவர் சிறை சென்றுவிட மீண்டும் க்ளைமேக்ஸில் தான் வருவார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு கெஸ்ட் ரோல் போலத்தான் செய்திருப்பார்.
இதனை கண்டு எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அதிர்ச்சியடைய, படத்தில் அடுத்தவர் மனைவி மீது ஆசைப்படும் கெட்டவனாக நடித்த சிவாஜியின் கேரக்டரை அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் படம் ஒரே நாளில் திரையரங்களில் இருந்து தூக்கப்பட்ட நிலையில், படு தோல்வியையும் சந்தித்தது. ஆனாலும் எம்.ஜி.ஆர். சிவாஜி என இரு ஜாம்பவான்கள் இணைந்து நடித்த ஒரு படம் என்ற பெருமை மட்டும் கூண்டுக்கிளி படத்திற்கு உண்டு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“