மனிதரில் தோன்றும் அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது வரிகள் மூலம் பாடல்களை கொடுத்த கண்ணதாசன், வசனகர்த்தா சொன்னதை கேட்டு தனது பாடல் வரிகளை திருத்திய சம்பவமும் நடந்துள்ளது.
சிவாஜி சரோஜா தேவி நடிப்பில் கடந்த 1964-ம் ஆண்டு வெளியாள படம் புதிய பறவை. ஒரு கொலையை கண்டுபிடிக்க, காவல்துறையை சேர்ந்தவர்கள் நாயகனின் வீட்டில் நுழைந்து விசாரணை நடத்தும் பாணியில் வெளியான இந்த படம் அந்த காலக்கட்ட ரசிகர்கள் மட்டுமல்லாமல் இப்போது உள்ள ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ரொமான்டிக் த்ரில்லர் பாணியில் வெளியான இந்த படத்தில் சிவாஜி மற்றும் சரோஜா தேவியின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்ற நிலையில், தாதா மிரசி இந்த படத்தை இயக்கியிருந்தார். சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு எம்.ஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். படத்தின் அத்தனை பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.
படத்தில் இடம் பெற்ற, பார்த்த ஞாபகம் இல்லையோ, சிட்டுக்குருவிக்கு முத்தம் கொடுத்து, எங்கே நிம்மதி உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இந்த படத்தில் சிவாஜி சரோஜா தேவி இடையேயான ரொமான்டிக் காட்சிகள் இப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம். இந்த காட்சிகளை மறைந்த நடிகர் விவேக் – எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் குரு என் ஆளு படத்தில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற, சிட்டுக்குருவிக்கு முத்தம் கொடுத்து என்ற பாடலை கவியரசர் கண்ணதாசன் எழுதும்போது படத்தின் வசனகர்த்தாவான ஆரூர்தாஸ் அமந்துள்ளார். அப்போது கண்ணதாசன் வரிகளை சொல்ல, அவரது உதவியாளர் எழுதிக்கொண்டு இருக்கிறார். இதில் 2-வது சரணத்தில், ஒரு தடவை தேன் குடித்து மடியில் விழுந்தேனா என்று கண்ணதாசன் கூறியுள்ளார்
இதை கேட்ட வசன கர்த்தா ஆரூர்தாஸ் கவிஞரே இது ஆண் பாடுவதா அல்லது பெண் பாடுவதா என்று கேட்டுள்ளார். இதற்கு கண்ணதாசன் பெண் பாடுவது என்று சொல்ல, பெண் என்பவள் தேன் கொடுப்பவள் என்று சொல்ல, உடனடியாக அதை ஏற்றுக்கொண்ட கண்ணதாசன் ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா என்று மாற்றியுள்ளார். இதை கேட்டு ஆரூர்தாஸ், ஒரு சொல்லை மாற்றியதால் பாடல் எங்கேயோ சென்றுவிட்டது என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“