இந்திய திரை இசையில் பல பாடகிகள் தங்களது இனிமையான குரல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான உள்ளனர். இதில் ஒரு சில பாடகர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும் அதே சமயம் அவர்களுக்கென தனியாக ரசிகர்கள் பட்டாளம் இருக்கும். ஆனாலும் தனது குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த சில பாடகிகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இல்லாமலும் இருக்கின்றனர்.
அப்படி ஒரு பாடகிதான் பி.எஸ்.சசிரேகா. 70-80 களில் தனது இனிமையான குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் தான் சசிரேகா. 1973-ம் ஆண்டு சிவக்குமார் நடிப்பில் வெளியான பொண்ணுக்கு தங்க மனசு என்ற படத்தில் இடம்பெற்ற தஞ்சாவூரு சீமையிலே என்ற பாடல் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய சசிரேகா, வாணி ஜெயராமுடன் இந்த பாடலை பாடியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான அபூர்வராகங்கள் படத்தில் கேள்வியின் நாயகனே என்ற பாடலை பாடியிருந்தார். அதன்பிறகு சில ஆண்டுகள் பாடல்களுக்கு ஹம்மிங் மட்டும் செய்து வந்த சசிரேகா, அதன்பிறகு1978-ம் ஆண்டு வெளியான லட்சுமி என்ற படத்தில் மேளம் கொட்ட நேரம் வரும் என்ற பாடல் மூலம் ரீ-என்டரி கொடுத்த சசிரேகா இளையராஜா இசையில் முதன் முதலாக பாடினார்.
அதனைத் தொடர்ந்து, காயத்ரி பத்தில் வாழ்வே மாயமா? வட்டத்துக்குள் சதுரம் என்ற படத்தில் இதோ இதோ என் நெஞ்சிலே, கிராமத்து அத்தியாயம் படத்தில் பூவே இது பூஜை காலமே, அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் திறன்பாடியே போற்றிடுவேன், ஒரு ஓடை நதியாகிறது படத்தில் தென்றல் வந்து முத்தமிட்டது உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை கொடுத்து தவிர்க்க முடியாத பாடகியாக உருவெடுத்தார். சசிரேகா.
இளையராஜா இசையில் பல பாடல்களை பாடி வந்தாலும், சசிரேகாவுக்கு பிரேக் கொடுத்த பாடல் என்றால் அது விழியில் விழுந்து இதயம் நுழைந்து பாடல் தான். அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் அந்த காலத்தில் காதலர்களின் ஃபேவரெட் பாடலாக ஒளித்துக்கொண்டிருந்தது. இளையராஜா மட்டுமல்லாது டி.ராஜேந்தர் இசையிலும் பல பாடல்களை பாடியுள்ளார் சசிரேகா.
அதிலும் உறவை காத்த கிளி என்ற படத்தில் இடம்பெற்ற எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி என்ற பாடல் சசிரேகாவுக்கு பெரிய வெற்றியை கொடுத்தது, டி.ராஜேந்தர் இசையில் அவர் பாடிய அனைத்து பாடல்களுமே ஹிட் பாடலாக அமைந்தது. அதேபோல் ஊமை விழிகள் படத்தில் ராத்திரி நேரத்து பூஜையில், மாமரத்து பூவெடுத்து, கண்மணி நில்லு காரணம் சொல்லு, உழவன் மகன் படத்தில் செம்மரி ஆடே உள்ளிட்ட பாடல்கள் சசிரேகாவின் ஹிட் லிஸ்டில் உள்ளது.
எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா கங்கை அமரன் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள சசிரேகா, அவ்வப்போது மேடையில் இசை கச்சேரியும் நடத்தியுள்ளார். 90-களின் முற்பகுதியில் பிரபலமான பாடகியாக வலம் வந்த சசிரேகா, ஏ,ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான கிழக்கு சீமையிலே படத்திலும் பாடல்கள் பாடியுள்ளார்.
1973-ம் ஆண்டு தனது இசை பயணத்தை தொடங்கிய சசிரேகா 2023-ம் ஆண்டில் தனது 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். சினிமாவில் தனது குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்திருந்தாலும், இன்றைய காலக்கட்டத்தில் சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திராத ஒரு பாடகியாகத்தான் சசிரேகா இருக்கிறார் என்று சொல்லலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.