தமிழ் சினிமாவில் நடிகர் திகலம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசன் சக நடிகர்கள், பாடகர்கள் என அனைவரிடமும் அன்போடு பழகும் குணம் கொண்டவர் என்றாலும் சில சமயங்களில் அவரின் அபரீதமாக அன்பின் காரணமாக தங்கள் பலர் தங்கள் வேலையை சரியாக செய்ய முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் பாடகி பி.சுசீலா ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
Advertisment
க்ளாசிக் சினிமாவில் முன்னணி பாடகிகளில் ஒருவராக திகழ்ந்த பி.சுசீலா, பல முன்னணி நடிகைகளுக்கும் தனது இனிமையான குரலின் மூலம் வெற்றியை கொடுத்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் பாடல்களை பாடியுள்ள பி.சுசீலா இன்றும் அவரது பாடல்களை ரசிக்க தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி வைத்துள்ளார் என்று சொல்லலாம்.
1967-ம் ஆண்டு ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான படம் திருவருட்செல்வர். சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்ரி, முத்துராமன், பத்மினி, கே.ஆர்.விஜயா, நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கே.வி.மகாதேவன் இசையமைத்த இந்த படத்திற்கு அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியுள்ளார்.
11 பாடல்கள் கொண்ட இந்த படத்தில் 7 பாடல்களை டி.எம்.சௌந்திரராஜன் பாடியிருந்தார். மேலும் இரு பாடல்களை பாடகி பி.சுசிலா பாடியிருந்தார். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற மன்னவன் வந்தானடி பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் ஒரு பாடலாக நிலைத்திருக்கிறது. இந்த பாடல் பதிவு நடைபெறும்போது, சிவாஜியும் பங்கேற்றுள்ளார். எப்போதும் அனைவரிடமும் அன்பாக பழகும் சிவாஜி, இந்த பாடல் பதிவின்போது பி.சுசீலாவின் அருகில் அமர்ந்துள்ளார்.
சிவாஜி அருகில் அமர்ந்ததால் பாட முடியாமல் திணறிய பி.சுசீலா என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளார். மேலும் பாடலில் வரும் சொரவரிசை பதிவு நடைபெற்றபோதும், சிவாஜி அருகில் இருக்கும்போது பாட முடியாமல் பல டேக்குகள் வாங்கியுள்ளார். அதன்பிறகு மெதுவாக வெளியில் வந்து இயக்குனர் உள்ளிட்ட சிலரிடம் அவரை வெளியில் அழைத்துக்கொள்ளுங்கள் அப்போது தான் என்னால் சரியாக பாட முடியும் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு அவர்கள் சிவாஜி கணேசனை அழைத்து செல்ல, பி.சுசீலா அற்புதமாக அந்த பாடலை பாடி முடித்துள்ளார். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil