வென்னிற ஆடை படத்தின் மூலம் ஜெயலலிதா தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனதை போல் அந்த படத்தில் வென்னிற ஆடை நிர்மலா என்ற நடிகையும் அறிமுகமாகியுள்ளார். இவர், சிவாஜியின் நடித்த முதல் படம் குறித்த அனுபவத்தை தற்போது பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் புதுமை இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான படம் வென்னிற ஆடை. 1965-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்திருந்த நிலையில், ஜெயலலிதா, நிர்மலா, மூர்த்தி ஆகியோர் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர்கள். இதில் நடிகர் மூர்த்தி வென்னிற ஆடை மூர்த்தி என்றும், நடிகை நிர்மலா வென்னிற ஆடை என்று அழைக்கப்படுகிறார்கள்.
இவர்கள் இருவருமே இந்த படத்திற்கு பிறகு பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும், இவர்களின் முதல் படமான வென்னிற ஆடையே இவர்களின் அடையாளமாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த வென்னிற ஆடை நிர்மலா, சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்த முதல் படம் லட்சுமி கல்யாணம்.
கண்ணதாசன் கதையில் உருவான இந்த படத்தில், சிவாஜியின் தங்கை லட்சுமி கேரக்டரில் நடித்திருந்தவர் வென்னிற ஆடை நிர்மலா. படத்தில் வில்லனான நம்பியார் லட்சுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திக்கொண்டே இருப்பார். அண்ணனான சிவாஜியும், பொறுத்துக்கொண்டு இருக்கும் நிலையில், ஒரு கட்டத்தில் நம்பியாரை வெட்டிவிட்டு வருவதாக கூறி அரிவாளுடன் புறப்படுவார் சிவாஜி கணேசன். அப்போது அவரது தங்கையான லட்சுமி அவரை தடுக்க வேண்டும்.
இந்த காட்சி படமாக்கப்பட்டபோது, சிவாஜியை தடுக்கும்போது, வென்னிற ஆடை நிர்மலா தனது வசனத்தை மறந்துள்ளார். அடுத்து திரும்பவும் படமாக்கப்பட்டபோது, வசனத்தை சரியாக சொல்லிவிட்டு அண்ணன் கையில் இருந்து அரிவளை பிடுங்காமல் இருந்துள்ளார். பலமுறை டேக் வாங்கியும், இந்த காட்சியில் வென்னிற ஆடை நிர்மலாவுக்கு நடிப்பு வராத நிலையில், ஒரு கட்டத்தில், படப்பிடிப்பு சிறிது நேரம தடைபட்டுள்ளது. அதன்பிறகு வென்னிற ஆடை நிர்மலாவை தனியாக அழைத்துள்ளார் சிவாஜி கணேசன்.
உங்களுக்கு 3 அண்ணன்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் இப்படி அரிவாளுடன் கிளம்பினால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று நினைத்துக்கொண்டு செய்யுங்கள். சரியாக வரும். எந்த காட்சியாக இருந்தாலும் அது நமக்கு நடந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து செய்தாலே நடிப்பு சரியாக வந்துவிடும் என்று கூறியுள்ளார். அதன்பிறகு வென்னிற ஆடை நிர்மலா அந்த காட்சியில் சிறப்பாக நடித்துள்ளார். இதை அவரே சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“