தமிழ் சினிமாவில் தனது பாடல்கள் மூலம் முத்திரை பதித்த இளம் கவிஞர்களில் முக்கியமானவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார். வாழ்க்கையின் தத்துவங்களை தனது பாடல்கள் மூலம் வெளிக்கொண்டு வந்த கவிஞரான பட்டுக்கோட்டையார், தனது 29-வயதில் மரணமடைந்தது தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது.
சமூக சீர்த்திருந்தங்களை தனது பாடல்கள் மூலம் வெளியுலகத்திற்கு தெரியப்படுத்திய பட்டுக்கோட்டையாருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. அதே சமயம் தான் பார்க்கும் ஒவ்வொரு செயலையும் கவிதையாக மாற்றுவதில் கை தேர்ந்தவர். இவரின் கவிதை நயத்தை கேட்ட ஊர் மக்கள் சினிமாவுக்கு சென்றால் பெரிய ஆளாக வருவாய் என்று சொல்ல, அதற்காக சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்துள்ளார்.
சென்னைக்கு வந்தாலும் அவருக்கு வாய்ப்பு எளிதில் கிடைத்து விடவில்லை. அதே சமயம் தனது முயற்சியையும் கைவிடாத பட்டுக்கோட்டையார், தனது ஊரில் இருந்தபோலபே சென்னையிலும் தான் பார்க்கும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு கவிதை கூறி வந்துள்ளார். ஆனால் சினிமா வாய்ப்பு இல்லாதததால் பசி, வறுமையில் வாடியுள்ளார். இந்த சமயத்தில் சினிமா பிரபலம் ஒருவர் பாடல் கேட்டு பட்டுக்கோட்டையாரிடம் வந்துள்ளார்.
1955-ம் ஆண்டு வெளியான மகேஷ்வரி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் கவிஞராக அறிமுகமான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், தொடர்ந்து அலாவுதீனும் அற்புத விளக்கும், கற்புக்கரசி, நாடோடி மன்னன் உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான பல படங்களை தனது பாடல்கள் மூலம் நிறைவு செய்வதவர் தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
கடவுள் நம்பிக்கை இல்லாத பட்டுக்கோட்டையாரிடம் கடவுளை வாழ்த்தும் வகையில் ஒரு பாடல் வேண்டும் என்று கேட்டுள்ளார். தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால் அந்த பாடலை எழுதமாட்டேன் என்று சொல்ல மனமில்லாத பட்டுக்கோட்டையார், முதல் வாய்ப்பு விட்டுவிடக்கூடாது என்றும், அதே சமயம் தனது கொள்கையில் இருந்தும் மாறக்கூடாது என்று யோசித்துள்ளார்.
இறுதியாக அவர், ‘’நல்லாருக்கும் பொல்லாருக்கும் நடுவில் இருக்கும் சாமி, நீ கல்லா போன காரணத்தை எல்லோருக்கும் காமி’’ என்று எழுதி கொடுத்துள்ளார். இந்த வரிகளை படித்து பார்த்த அந்த தயாரிப்பாளருக்கு கன்னத்தில் அறைந்தது போல் இருந்துள்ளது. உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டார். தான் வறுமை பசியில் இருந்தாலும், கடைசிவரை தனது கொள்கையில் தீர்க்கமாக இருந்தவர் தான் பட்டுக்கோட்டையார்.