திரைத்துறையில் சிவாஜி நடிகர் திலகம் என்று போற்றப்பட்டாலும், பிரபல நடிகை சவுக்கார் ஜானகிக்கு எப்படி நடிக்க வேண்டும் என்று தன்னுடன் நடிக்கும்போது சொல்லி கொடுத்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. இதன்பிறகு என்ன நடந்துது?
பராசக்தி படத்தை தொடர்ந்து ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த பல படங்களில் ஹீரோவாக நடித்த சிவாஜி, 1968-ம் ஆண்டு வெளியான உயர்ந்த மனிதன் என்ற படத்தில் நடித்திருந்தார். சிவாஜி கணேசனுடன், சவுக்கார் ஜானகி, அசோகன், மேஜர் சுந்தர் ராஜன், வாணிஸ்ரீ, சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தையும் கவிஞர் வாலி எழுதியிருந்தார். சிவக்குமார் சிவாஜி இணைந்து நடித்த முதல் படம் இது.
இந்த படத்தில் வாணிஸ்ரீயை காதலித்த சிவாஜி, சவுக்கார் ஜானகியை திருமணம் செய்துகொள்வார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், ஆபீஸ் சென்ற சிவாஜி, தனது மனைவி சவுக்கார் ஜானகி கொடுத்துவிட்ட சாப்பாட்டை சாப்பிடாமல், அவர் வீட்டு டிரைவரின் மகள் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டுவிடுவார். இதனால் மாலையில் சவுக்கார் ஜானகி அனுப்பிய சாப்பாடு அப்படியே திரும்ப வந்துவிடும். இதனால் அவர் சிவாஜி மீது கோபப்பட வேண்டும்.
இந்த காட்சியை படமாக்கும்போது சவுக்கார் ஜானகியின் நடிப்பு, அவ்வளவு ஆக்ரோஷமாக இல்லை. இதை பார்த்த சிவாஜி நான் இருக்கிறேன் என்று பார்க்க வேண்டாம். உன் கணவன் நீ கொடுத்த சாப்பாட்டை சாப்பிடாமல் வேலைக்காரி கொடுத்த சாப்பாட்டை சாப்பிடுகிறான் என்றால் எனக்கு என்ன கோபம் வருமோ அந்த கோபத்தை காட்ட வேண்டும் என்று சொல்ல, படத்தின் இயக்குனர்களான கிருஷ்ணன் பஞ்சு இருவரும் அதையே கூறியுள்ளனர். அதன்பிறகு இந்த காட்சி மீண்டும் படமாக்கப்பட்டுள்ளது.
2-வது முறை சவுக்கார் ஜானகி சிறப்பாக நடித்து அந்த காட்சி சரியாக அமைந்திருந்தாலும், சிவாஜி தன்னைவிட ஜூனியர் நடிகர் அவர் நடிக்கு நடிப்பு சொல்லிக்கொடுக்கிறாரே என்று அவரிடம், கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் சவுக்கார் ஜானகி. அதேபோல் அவ்வப்போது சவுக்கார் ஜானகி ஆங்கிலத்தில் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் இதை பிடிக்காத சிவாஜி அவர் ஆங்கிலத்தில் பேசும்போது அங்கிருந்து நழுவிச்செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
சிவாஜியை விட 3 வயது இளையவர் என்றாலும், அவருக்கு 2 வருடங்களுக்கு முன்பாகவே சவுக்கார் ஜானகி திரையுலகில் அறிமுகமாகிவிட்டார். இவர்களுக்கு இடையிலான மோதல் அதிகமாக இருந்த நிலையில், ஏ.வி.எம். நிறுவனம் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த தகவலை ஏ.வி.எம்.குமரன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
சக நடிகையுடன் படப்பிடிப்பில் முரண்பாடுகள் ஏற்பட்டு இருந்தாலும், அதன்பிறகு இருவரும் இணைந்து சில வெற்றிப்படங்களை கொடுத்துள்ளனர். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் ஒரு நடிகையுடன் அல்லது நடிகருடன் மோதல் என்றால அவர்கள் கடைசிவரை இணைந்து பணியாற்றும் சூழல் வருவது கடினமாக ஒரு செயலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“