ரத்த கண்ணீர் படத்திற்கு பிறகு சரியான வெற்றி இல்லாமல், நாடகத்தின் பக்கம் திரும்பிய நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு மீண்டும் ஒரு பெரிய வெற்றியை கொடுத்தவது ஒரு காமெடி நடிகர் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். அது என்ன படம்? அந்த நடிகர் யார் என்பதை பார்ப்போமா?
தமிழ் சினிமாவில், முற்போக்கு சிந்தனைகளுடன் படங்களை கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் எம்.ஆர்.ராதா. நாடக நடிகராக இருந்து சினிமாவில், காமெடி, குணச்சித்திரம், ஹீரோ, வில்லன் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து புகழ் பெற்றிருந்த இவர், பல நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்துள்ளார். மேலும் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.
எம்.ஆர்.ராதா சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தபோதும் நாடகங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்தார். அந்த வகையில் ஒருமுறை ராமாயனத்தை கிண்டல் செய்து ஒரு நாடகத்தை நடத்தியிருந்தார். இந்த நாடகத்தை பார்த்த பலரும், இது தங்கள் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது என்று கூறி வந்த நிலையில், ஒரு சிலர், எம்.ஆர்.ராதாவிடமே நாடகம் எங்களுக்கு மனதை காயப்படுத்தும் வகையில் உள்ளது என்று புகார் கூறியுள்ளனர்.
இதை ஏற்றுக்கொண்ட எம்.ஆர்.ராதா அடுத்த நாள், இந்த நாடகத்தை பார்க்க வருகிறவர்கள் வராலம். ஆனால் தங்கள் மனம் புண்பட்டுள்ளதாக உணரும் எவரும் இந்த நாடகத்தை பார்க்க வர வேண்டாம். அவர்களின் காசு எனக்கு தேவையில்லை. இதை பொருட்படுத்தாமல் நாடகத்தை நீங்கள் பார்க்க வந்து உங்கள் மனம் புண்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்று ஒரு போஸ்டரை அடித்து ஒட்டியுள்ளார்.
அந்த அளவிற்கு முற்போக்கு சிந்தனையுடன் இருந்த எம்.ஆர்.ராதா, ஒரு சில படங்களில், ஹீரோவாகவும் நடித்துள்ளார். அந்த வகையில் இவர் நடித்த ரத்த கண்ணீர் திரைப்படம். இன்றைக்கும் இந்த படத்தை தாண்டி ஒரு படம் தமிழ் சினிமாவில் வெளியாகவில்லை என்று சொல்லும் அளவுக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்து இன்றும் பேசப்படும் ஒரு படமாக நிலைத்திருக்கிறது. இந்த படம் பெரிய வெற்றியாக அமைந்தாலும், அதன்பிறகு எம்.ஆர்.ராதாவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
இதன் காரணமாக மீண்டும் நாடகங்களில் நடிக்க தொடங்கிய எம்.ஆர்,ராதா அதில் கவனம் செலுத்தி வந்தார். அந்த சமயத்தில் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரும் தயாரிப்பாளருமான வி.கே.ராமசாமி ஒரு படத்திற்கு கதை எழுதி அதை தயாரிக்க முடிவு செய்துள்ளார். இதை தெரிந்துகொண்ட எம்.ஆர்.ராதா, வி.ஜே.ராமசாமிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். சினிமாவில் வெற்றி இல்லை. நாடகத்தை நடத்திக்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை. உங்கள் படத்தில் எனக்கு கட்டாயம் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தை படித்த வி.கே.ராமசாமி, அந்த படத்தில் வேறு ஒருவர் நடிக்க வேண்டிய கேரக்டரில் எம்.ஆர்.ராதாவை நடிக்க வைத்துள்ளார். அந்த படத்தில் பிரேம் நசீர், வி.ஜே.ராமசாமி ஆகியோருடன், முக்கிய கேரக்டரில் எம்.ஆர்.ராதா நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்று ரத்த கண்ணீர் படத்திற்கு பிறகு, எம்.ஆர்.ராதாவுக்கு மீண்டும் வெற்றியை பரிசாக கொடுத்தது. அந்த படம் தான் கே.சோமு இயக்கததில், ஏ.பி.நாகராஜன் திரைக்கதையில் வெளியான நல்ல இடத்து சம்பந்தம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“