தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர்களுள் ஒருவர் டி.இமான். உண்மையாகவும், கடுமையாகவும் உழைத்தால் யார் எந்த இடத்தை வேணாலும் அடைய முடியும் என்பதற்கு வாழும் உதாரணமாக திகழ்பவர் இமான். சிறுவயதிலிருந்தே இசையின் மீது காதல் கொண்ட அவர் பள்ளிப்பருவத்திலேயே இசை வாத்தியங்களை கற்கத் தொடங்கியிருந்தார்.
இசையின் மீது கொண்ட அதீத காதலால் சினிமாவிற்கு இசையமைக்க வேண்டும் என்ற கனவு அவருக்குள் உதித்தது. சாமானிய மக்கள் சினிமாவிற்குள் நுழைவது என்பது அரிது என்ற காலகட்டத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வந்தார் இமான். நாம் போகின்ற பாதை சரியாக இருந்தால், நம் பயணம் வெற்றிகரமாக முடியும் என்பதைப் போல சினிமா வாய்ப்புகளுக்காக காத்திருந்த இமானிற்கு சீரியலில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சீரியல் தானே, என்று அதை ஒதுக்காமல் தனக்கு சினிமாவில் நுழைவதற்கான முதல் கேட் பாஸ்சாக அதை பயன்படுத்திக் கொண்டார்.
நாம் சிறுவயதில் கேட்டு ரசித்த சீரியல்களான கோலங்கள், கல்கி திருமதி செல்வம் செல்லமே போன்ற சீரியல்களின் டைட்டில் பாடல் இவர் உருவாக்கியதே. தொடர்ந்து தனக்கு கிடைத்த வாய்ப்புகள் மூலம் அடுத்தடுத்த சினிமா கதவுகளை உடைத்தெறிந்து வந்த அவருக்கு கடைசியாக அந்த திரைகதவு திறந்தது. 2001 ஆம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் தயாரான “காதலே சுவாசம்” என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இமான்.

படத்திற்கான இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்று அவரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.ஆனால் அந்த அந்த மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிப்பதற்குள்ளாகவே மீண்டும் சோதனைகளை சந்தித்தார் இமான். அந்தப் படம் இன்று வரை வெளியாகவில்லை என்பதுதான் அந்த சோதனை. நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு இசையமைத்த படம் வெளியாகவில்லையே, என்ற கலங்காமல், தனக்கான கதவு மீண்டும் திறக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து தனது வேலைகளை மும்முரமாக செய்து வந்தார் இமான்.
“திறமையானவர்களை தமிழ் சினிமா கைவிடாது” என்பதைப் போல அவருக்கான மற்றொரு வாய்ப்பை,2002’ல் வெளிவந்த “தமிழன்” படத்தின் மூலம் தமிழ் சினிமா அவருக்கு வழங்கியது. அந்த காலகட்டத்தில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்த விஜய்க்கு அப்படத்தின் பாடல்கள் தமிழகம் முழுவதும் மிகப் பெரிய அடையாளத்தை கொடுத்தது, குறிப்பாக அப்படத்தில் வரும் “உள்ளத்தை கிள்ளாதே” பாடலை விஜய்யும், அன்றைய உலக அழகியான பிரியங்கா சோப்ராவும் சேர்த்து பாடிய அப்பாடல் பெருவெற்றியை பதிவு செய்தது.
அவருடைய நீண்ட கால உழைப்பிற்கு கிடைத்த முதல் பரிசாகவும் அமைந்தது. மேலும் அப்படத்தில் “மாட்டு மாட்டு” என்ற பாடலை பாடியதன் மூலம் தமிழ் சினிமாவில் தனது குரலில் முதல் பாடலை பதிவு செய்திருந்தார் இமான். அதன் பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிய தொடங்கின, நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து தனது இசை ராஜ்யத்தை தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி கொண்டிருந்தார். அவருக்கு “விசில்” திரைப்படத்திற்குப் பிறகு தமிழகம் முழுவதும் பரவலாக அறிமுகம் கிடைத்தது.

2007 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த “மருதமலை” படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தனது 25வது படத்தை திரைக்கு வந்து வெறும் ஐந்து ஆண்டுகளிலே நிறைவு செய்து அசத்தியிருந்தார் இமான். அதன் பிறகு அவருடைய இசையின் வேகமும்,வளர்ச்சியும் பல மடங்கு உயர்ந்தது. தொடர்ந்து நல்ல படங்களில் இசையமைத்து வந்த அவர் 2013 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான “தேசிங்கு ராஜா” படத்திற்கு இசையமைத்து தனது 50ஆவது படத்தை தமிழ் சினிமாவில் பூர்த்தி செய்திருந்தார்.
கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் உயர்ந்து கொண்டே வந்த அவருக்கு, 2018’இல் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த “டிக் டிக் டிக்” படம் நூறாவது படமாக அமைந்தது. சினிமாவிற்கு வந்த 16 ஆண்டுகளிலேயே 100 படங்களுக்கு இசையமைத்து ஆச்சரியப்படுத்தி இருந்தார் இமான். இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு, அவர் வளர்ந்து வரும் காலகட்டத்தில் வெளியான மனம் கொத்தி பறவை,வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ரஜினி முருகன் போன்ற படங்களுக்கு இமான் இசையமைத்திருந்தார், அப்படத்தில் உள்ள பாடல்கள் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியிருந்தது. இன்று பல குடும்ப ரசிகர்களை “சிவகார்த்திகேயன்” பெறுவதற்கு முக்கிய காரணமாகவும் அவருடைய பாடல்கள் அமைந்திருந்தது.
இமான்-பிரபு சாலமன் கூட்டணிக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் தமிழகத்தில் உள்ளது. “மைனா”,”கும்கி” படத்தின் பாடல்கள் இன்று வரை கிராமங்களின் பேருந்துகளில் ஒலித்துக் கொண்டிருப்பதை நாம் காணலாம். “2012”ஆம் ஆண்டு வெளிவந்த “கும்கி”படத்தின் பாடல்கள் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருந்தது என்றால் அது மிகையாகாது. அந்தளவிற்கு தமிழக மக்களிடம் அந்த இசை ஆல்பம் ஏற்படுத்திய தாக்கம் இன்று வரை தொடர்கிறது.அப்படம் அவருக்கு கிராமப்புறங்களில் பல்வேறு ரசிகர்களை குவிக்க உதவி இருந்தது.

மேலும் அப்படம் அவருக்கு பல விருதுகளையும் வாங்கி கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இமான் மாறவும் உதவியது . அவருடைய திரை வாழ்வில் மைல்கல்லாக அமைந்த மற்றொரு திரைப்படம் அஜித் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த “விஸ்வாசம்”. அப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை மக்களிடையே பெற்றிருந்தது. குறிப்பாக “கண்ணானே கண்ணே” பாடல் உலகம் முழுவதும் இருக்கும் தந்தையர்களின் கீதமாகவும் மாறி இருந்தது.
அப்படி ஒரு ஆத்மார்த்தமான இசையை கொடுத்ததற்கு அவருக்கு பல விருதுகள் கிடைத்தன குறிப்பாக அந்த ஆண்டிற்கான சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது அவரை கௌரவித்தது. இதுவரை தமிழ் சினிமாவின் நான்கு இசையமைப்பாளர்கள் மட்டுமே சிறந்த இசை அமைப்பாளர்களுகான தேசிய விருதை பெற்றிருந்த நிலையில் அந்தப் பட்டியலில் ஐந்தாவதாக இணைந்து சாதனை படைத்திருக்கிறார் இமான். இதுவரை 120’க்கும் மேற்ப்பட்ட பாடகர்களை இவர் அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதிலும் தமிழில் மட்டுமே சுமார் 80 பாடகர்களை அறிமுகப்படுத்தி அமர்களப்படுத்தியிருக்கிறார்.
ரஜினிகாந்த், விஜய்,அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விஷால், ஜெயம் ரவி என தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து ரசிகர்களின் பேராதரவோடு வலம் வருகிறார். சீரியலில் தொடங்கிய அவரது இசைப்பயணம் இன்று தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு,ஹிந்தி என அவருடைய இசை கோட்டைகள் இன்னும் விரிவடைந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் பல தடைகளைத் தாண்டி இன்று தனக்கென ஒரு தனி இசை சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டு கொண்டிருக்கும் “இசை அரசன்”,இமானை அவருடைய 40 வது பிறந்தநாளில் வாழ்த்துவோம். இன்னும் பல சாதனைகளையும், உயரங்களையும் அவர் அடைய வாழ்த்துக்கள்.
நவீன் குமார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/